மே.9
திருப்பதி ஏழுமலையான் கோவிலின் ஆனந்த நிலையம் எனப்படும் தங்க கோபுரத்தை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலின தங்க கோபுரத்தை விதிமுறைகளை மீறி பக்தர் ஒருவர் வீடியோ எடுத்து அதை சமூக வலைதளத்தில் கடந்த ஞாயிற்றுகிழமை பதிவிட்டார். இந்த வீடியோ வைரலான நிலையில், கோவிலின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தற்போது கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், கோயிலின் அனைத்து இடங்களிலும் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்படும் எனவும் தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தேவஸ்தானம் சார்பில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதோடு, எலக்ட்ரானிக் பொருட்களை கோயிலுக்குள் பக்தர்கள் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் வைகுண்டம் காம்பளக்ஸ் மற்றும் முக்கிய நுழைவு வாயில் அருகில் உள்ள செக்யூரிட்டி பாயிண்ட் ஆகிய இரண்டு இடங்களில் மெட்டல் டிடெக்டர் மூலம் தீவிரமாக சோதனையிடப்பட்ட பிறகே அனுமதிக்கப்பட்டுவருகின்றனர். இத்தனை பாதுகாப்பு அம்சங்களையும் மீறி கோயிலின் தங்கக் கோபுரம் வீடியோ எடுக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக தேவஸ்தான நிர்வாகத்தின் மூத்த லஞ்ச ஒழிப்பு மற்றும் பாதுகாப்பு அதிகாரியான நரசிம்மகிஷோர் கூறுகையில், இந்த விவகாரம் தொடர்பாக தேவஸ்தான நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்கவுள்ளது. தடை செய்யப்பட்ட பகுதியில் வீடியா எடுத்த நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 7-ந்தேதி திருமலையில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழை பெய்ததால் சுமார் 2 மணி நேரம் மின்சாரம் தடைபட்டது. அப்போது பக்தர் ஒருவர் விமான கோபுரத்தை பேனா கேமரா மூலம் வீடியோ எடுத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. எல்லா நெறிமுறைகளும் தெரிந்திருந்தும், அந்தப் பக்தர் மூலவர் தங்கக் கோபுரமான ஆனந்த நிலையம் விமானத்தை வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் வைரலாகப் பதிவிட்டிருப்பது வருத்தமளிக்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.