June 15, 23
தங்கள் கல்வி நிறுவனங்களில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் செயல்படுத்தியுள்ள புதிய திட்டம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக தமிழகத்துடன் வரலாற்று தொடர்பு கொண்ட திட்டமாக இது பார்க்கப்படுகிறது. திருப்பதி என்றாலே ஏழுமலையான் தரிசனமும், லட்டு பிரசாதமும் தான் பலருக்கும் நினைவில் தோன்றும். அதேசமயம் திருப்பதியிலேயே தரிசனம் செய்ய முடியாது. அங்கிருந்து திருமலைக்கு ஏறிச் சென்று பக்தர்கள் தரிசிக்க வேண்டும். இங்குள்ள கோயில்களை நிர்வகித்து வருவது TTD எனப்படும் திருமலை திருப்பதி தேவஸ்தானம்.
திருப்பதியை தாண்டி பல்வேறு முக்கிய நகரங்களில் ஏழுமலையான் கோயிலை கட்டி எழுப்பி பக்தர்கள் பயன்பெறச் செய்துள்ளனர். இந்த நடவடிக்கை படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. கோயில் மட்டுமின்றி பல்வேறு சமூக நலப் பணிகளையும் தேவஸ்தானம் மேற்கொண்டு வருகிறது. அதில் கல்வி, சுகாதாரம் ஆகியவற்றை குறிப்பிட்டு சொல்லலாம்.
கல்வி சேவையை பொறுத்தவரை ஆந்திர மாநிலத்தில் பல்வேறு கல்வி நிலையங்களை நடத்தி வருகின்றனர். தனியார் பள்ளிகளுக்கு இணையாக உயர்தர உள்கட்டமைப்பு வசதிகள் உடன் செயல்படுத்தி கொண்டிருக்கின்றனர். இந்த சூழலில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்து வைத்துள்ளது. அதாவது, தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் கல்வி நிறுவனங்களில் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்துள்ளனர்.
தரமான உணவு கொடுத்து சிறப்பான முறையில் கல்வி கற்கும் வகையில் ஊக்கப்படுத்த முடிவு செய்துள்ளனர். மதிய உணவு திட்டம் என்றாலே தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் தான் நினைவுக்கு வருகின்றன. நீதிக்கட்சி ஆட்சி காலத்தில் சென்னை மாகாணத்தின் சில பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டது. காமராஜர் ஆட்சியில் மதிய உணவு திட்டமாக மாறியது.
எம்.ஜி.ஆர் ஆட்சியில் சத்துணவு திட்டமாக விரிவடைந்தது. அதன்பிறகு புதிய உணவுப் பொருட்கள் உடன் அதிமுக, திமுக ஆட்சியில் படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டது. சமீபத்தில் காலை சிற்றுண்டி திட்டத்தை அறிமுகம் செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு நடவடிக்கை எடுத்தது.
இத்தகைய மகத்தான திட்டத்தை தான் சமீபத்தில் திருப்பதி தேவஸ்தானம் தங்கள் கல்வி நிலையங்களில் அமல்படுத்தியுள்ளனர். இதனை திருப்பதியில் உள்ள ஸ்ரீ கோவிந்தராஜா சுவாமி உயர்நிலைப் பள்ளியில் தேவஸ்தான இணை செயல் அதிகாரி சதா பார்கவி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் 3 ஆயிரம் மாணவ, மாணவிகள் பயன்பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை சரியான முறையில் பயன்படுத்தி கொண்டு மாணவர்கள் நல்ல எதிர்காலத்தை நோக்கி நடைபோடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழாவில் பேசிய சதா பார்கவி, தேவஸ்தான கல்வி நிலையங்களில் கற்றல் வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன. பல்வேறு கட்டணச் சலுகைகளை பெற்று மாணவர்கள் படிக்கலாம்.
நமது மாணவ, மாணவிகள் சிறப்பான உயரங்களை எட்ட ஒட்டுமொத்த ஆசிரியர்களும் உறுதுணையாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். கடந்த 4 ஆண்டுகளாகவே திருப்பதி தேவஸ்தானத்தின் கல்வி நிலையங்களில் புரட்சிகர திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த பட்டியலுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் மதிய உணவு திட்டம் அமைந்துள்ளது.