தி.மு.க. முக்கிய பிரமுகர்கள் 17 பேரின் சொத்து பட்டியலை, ஊழல் புகார்களுடன் இன்று காலை 10.15 மணிக்கு வெளியிடவுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வை சென்னை கமலாலயத்தில் ஒளிபரப்பு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தென்காசியில் கடந்த மாதம் நடந்த பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய மாநிலத்தலைவர் அண்ணாமலை, “தி.மு.க.வினரின் ஊழல் பட்டியல் தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியிடப்படும். இதனை நான் வெளியிடும்போது, தமிழக மக்கள் இன்னும் உற்சாகமாக கொண்டாட்டத்தில் ஈடுபடுவார்கள்” என்று கூறியிருந்தார்.
அதன்படி, தமிழ் புத்தாண்டு தினமான இன்று காலை 10.15 மணிக்கு, சென்னை தியாகராயநகரில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் 17 பேரின் சொத்து பட்டியல் மற்றும் ஊழல் பட்டியலை அண்ணாமலை வெளியிடுகிறார். இது முதல் பாகம் என்றும், அடுத்த பாகம் விரைவில் வெளியிடப்படும் என்றும் பா.ஜ.க. நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணாமலை வெளியிடவுள்ள தி.மு.க.வினர் மீதான சொத்து பட்டியலையும், ஊழல் பட்டியலை குறித்த விவரங்களை கமலாலயத்தில் பார்க்கும் வகையில், அகன்ற திரை மூலம் ஒளிபரப்பு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத் தேர்தல் பணியில் உள்ள அண்ணாமலையால், நேரடி பத்திரிகையாளர் சந்திப்பு நடத்த இயலாத நிலையில், இந்த பட்டியலை வெளியிட்டவுடன், நிர்வாகிகள் மத்தியில் அண்ணாமலை திரையில் தோன்றி பேசவுள்ளார். இந்த பேச்சு காரசாரமாக இருக்கும் என்றும் தெரிகிறது.
தி.மு.க. பிரமுகர்கள் சொத்துபட்டியல் வெளியீடு குறித்து 10 வினாடிகள் மட்டுமே ஓடும் வீடியோவை அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. மாநில பாஜக தலைவர் அண்ணாமலையின் இந்த நடவடிக்கை, தமிழக அரசியல் களத்தை பரபரப்பாக்கியுள்ளது.