அரபிக்கடலில் உருவான பிபோர்ஜோய் புயல் அடுத்த தீவிர புயலாக வலுப்பெறவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்கிழக்கு அரபிக்கடலில் நேற்று முன்தினம் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. வடகிழக்கு திசையில் நகர தொடங்கிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று புயலாக மாறியது. இந்தப் புயலுக்கு வங்கதேசம் மாநிலம் பிபோர்ஜோய் என பெயரை வழங்கியது. பிபோர்ஜோய் என்றால் பேராபத்து என்பது பொருளாகும்.
அரபிக் கடலில் உருவாகி உள்ள பிபோர்ஜோய் புயலானது வடக்கு நோக்கி நகர்ந்து, அடுத்த 6 மணிநேரத்தில் தீவிரமடைந்து வலுவானதாக உருமாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக் கடலில் கோவாவுக்கு 900 கிலோ மீட்டர் தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது. மேற்கு தென்மேற்கில் மையம் கொண்டுள்ள புயல் வடக்கில் நகர்ந்து தீவிர புயலாக வலுப்பெற உள்ளது. இதன் எதிரொலியாக கேரளா முதல் மராட்டியம் வரையிலான மேற்கு கடற்கரை பகுதிகளில் மழை தீவிரமடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.