மே.12
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள மோக்கா புயலானது தீவிர புயலாக உருமாறியுள்ளது. இந்நிலையில், நேற்றிரவு கோவை, ஈரோடு, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது.
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலையானது மோக்கா புயலாக மாறி நிலைகொண்டிருந்தது. இந்தப் புயலானது நேற்று மாலை 5.30 மணியளவில் தீவிர புயலாக வலுவடைந்தது. இந்த மோக்கா புயல், போர்ட் பிளேருக்கு மேற்கே 510 கிலோமீட்டர் மற்றும் வங்கதேசத்தின் தென்மேற்கே 1050 கிலோமீட்டர் இடையே தற்போது நிலைகொண்டுள்ளது.
இந்த புயல் மத்திய வங்கக் கடலில் இன்று காலை 8.30 மணிக்குள் அதிதீவிர புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதைத் தொடர்ந்து, புயலானது வடக்கு வடகிழக்கு திசை நோக்கி நகரும் என்றும், ஞாயிற்றுக்கிழமை தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரைகளுக்கு இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
14ம் தேதி, மணிக்கு 120 முதல் 145 கி.மீ., வேகத்துடன் வங்கதேசம் – மியான்மர் இடையே புயல் கரையை கடக்கும். இந்த மோக்கா புயல் கரையை கடக்கும் நேரத்தில், மணிக்கு 175 கிலோமீட்டர் வேகம் வரை காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் வரும் 14ம் தேதி வரை செல்ல வேண்டாம் எனவும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
வங்கக்கடலில் நிலவிய மோக்கா புயல் , தீவிர புயலாக வலுவடைந்ததால், நேற்று இரவு தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டியது. அதன்படி, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை கொட்டித் தீர்த்தது.
இந்த மோக்கா புயலால், தமிழகம், புதுச்சேரியில் ஒரு வாரத்திற்கு வெப்பத்தின் தாக்கம் வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும் என்றும், ஒரு சில இடங்களில் இலேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்திருந்த நிலையில், தமிழகத்தின் பல மாவட்டங்களில் நேற்றிரவு நல்ல மழை பெய்திருப்பது குறிப்பிடத்தக்கது.