ஜுலை, 09 –
சென்னை பெருங்குடி திருவள்ளுவர் நகரில் நேற்று ( ஞாயிறு) அதிகாலை அனிதா என்பவரின் கூரை வீடு திடிரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் தூக்கம் கலைந்து அனிதா, ஜன்னல் வழியே புகை வர தொடங்கியதை பார்த்த உடன் தூங்கிக் கொண்டிருந்த இரண்டு மகள்களையும் அவசரமாக எழுப்பி வெளியே கொண்டு வந்து உள்ளார். தெருவாசிகள் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சித்தாலும் கொழுந்து விட்டு எறிந்த நெருப்பை அணைக்க முடியாததால் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் வந்து சேருவதற்குள் வீடு முழுவதும் தீ பரவி ஆடைகள், பாத்திரங்கள், உணவுப் பொருட்கள் என அனைத்தையும் சாம்பலாக்கி விட்டது.
தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அனிதாவின் இளைய மகள் 18-வயதான கிரேசி, சூர்யா என்ற இளைஞருடன் இன்ஸ்டாகிராம் மூலமாக நட்பாகியுள்ளனர். நெருக்கமாக இருவரும் பழகி வந்த நிலையில் இது அணிதாவிற்கு தெரியவர மகளையும் சூர்யாவையும் கண்டித்துள்ளார். இதனால் கிரேசி, சூர்யாவுடன் பேசுவதை நிருத்திக் கொண்டு விட்டார். இதோடு நிற்காமல் அவர் வேறு ஒரு இளைஞருடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டு அவருடன் படம் எடுத்து சூர்யாவுக்கு அனுப்பி வெறுப்பேற்றி இருக்கிறார்.
ஆத்திரமடைந்த சூர்யா விலகிப்போன காதலியின் வீட்டை தீவைத்து எரித்து அனைவரையும் கூண்டோடு கொல்ல திட்டமிட்டது தெரியவந்துள்ளது. இது பற்றி சூர்யா. “தன்னை விட்டு விலகிய கிரேசி பள்ளிக்கரனையை சேர்ந்த ஒருவனுடன் சுற்றி வந்ததாள். நான் இதனைக் கண்டித்த உடன் அவள் அதை பள்ளிக்கரனை நண்பனிடம் சொல்லிவிட்டாள். அவன் நான்கு பேருடன் வந்து என்னை அடித்து உதைத்து நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து வைத்துக்கொண்டான். எனக்கு ரொம்பவும் அவமானமாகிவிட்டது.அதனால் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்தேன். ஆனால் நான் செத்தப் பிறகு கிரேசி , அவனுடன் சுற்றுவாள் என்பதை கற்பனை செய்து பார்த்த போது ஆத்திரம் அதிகமாகி விட்டது. இதனால் தான் வீட்டிற்கு தீ வைத்து அவளை கொலை செய்ய முயன்றேன்” இவ்வாறு சூர்யா தெரிவித்து உள்ளான். அவனை கொலை முயற்சி வழக்கில் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
இதே போனறு இன்னொரு நிகழ்வு இதற்கு முதல் நாளான சனிக்கிழமை நடந்து உள்ளது.
சென்னை பரங்கிமலையைச் சேர்ந்த அஸ்மிதாவுக்கு வயது 18 தான். அடையாறில் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு சேர்ந்து 4 நாட்கள் தான் ஆனது. கடந்த சனிக்கிழமை ( நேற்று முன் தினம்) கல்லூரிக்கு சென்று விட்டு பேருந்தில் பரங்கிமலை திரும்பிய அஸ்மிதாவை நவீன் என்ற இளைஞர் கழுத்தில் குத்தியதுதான் கொடூரத்தின் உச்சம். ரத்த வெள்ளத்தில் சரிந்த அஸ்மிதா உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லம்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டதால் உயிர் பிழைத்து உள்ளார்.
அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய நவீன் என்ற இளைஞரை போலிசார் விரட்டிச் சென்று பிடித்து உள்ளனர். விசாரணையில் அவன், அஸ்மிதா உடன் மூன்று வருடங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகம் ஏற்பட்டதாக தெரிவித்து உள்ளான்.
அதன் பிறகு நவீனின் தாயார் உடல் நலக்குறவைால் உயிர் இழந்துவிட்டார். இதனால் பெங்களூரில் உள்ள தந்தை அழைத்தும் அங்கு செல்லவில்லை. சென்னையில் தங்கிகொண்டு அஸ்மிதா சினேகிதத்தை பலப்படுத்துவதற்கு சுற்றி வந்து உள்ளான்.
காதல் போதையோடு இருந்தால் பரவாயில்லை. கஞ்சா போதைக்கும் அடிமையாகிவிட்டான். இது மட்டுமில்லாமல் இன்ஸ்டாகிராம் வழியே மேலம் சில பெண்களை நட்பாக்கிக் கொண்டான். அனைத்தையும் தெரிந்து கொண்ட அஸ்மிதா அவனை விட்டு விலக ஆரம்பித்தார்.
இதனால் மனம் வெறுத்துப் போன நவீன், அஸ்மிதா இன்னொரு இளைஞரோடு பேசிக்கொண்டு இருப்பது தெரிந்ததும் ஆத்திரம் அடைந்தான். மூன்று வருடங்கள் பழகிவிட்டு இப்போது தன்னை வெறுத்துவிட்டவள் வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என்று திட்டமிட்டான். அஸ்மிதாவை கல்லூரியில் இருந்து பின் தொடர்ந்து வந்து ஒரு நிமிடம் பேச வேண்டும் என்றுக் கூறி ஒளித்து வைத்து இருந்த கத்தியால் கழுத்தை அறுத்து விட்டு தப்பிவிட்டான். நவீனிடம் இந்த தகவல்களைள் பெற்றுக் கொண்ட போலீசார் அவனை சிறையில் அடைத்துள்ளனர்.
அடுத்தடுத்த நாட்களில் நடந்த இரண்டு நிகழ்வுகளிலும் 18 வயதுக்கு முன்பே இந்த இரு பெண்களும் இன்ஸ்டாகிராம் மூலம் ஆண் நண்பர்கள் உடன் நட்பை ஏற்படுத்தி கொண்டு பழகி வந்துள்ளனர். பிறகு ஏதே ஒரு காரணத்தால் பிடிக்காமல் போனதால் விலகிச் சென்று உள்ளனர்.கோபம் அடைந்த ஆண் நண்பர்கள் சினேகதிகளை கொல்ல முயன்று கைதாகி உள்ளனர்.
இது பற்றி உளவியல் மருத்துவர்கள், 18 வயதுக்கு முந்தைய பருவத்தில் சிலருக்கு மனதில் தடுமாற்றம் ஏற்படுவது இயல்புதான். இதனைப் பெற்றோர் புரிந்து கொண்டு பிள்ளைகளை கவனமாக பார்த்து வரவேண்டும். அவர்கள் பயன்படுத்தும் செல்போன்கள், சமூக வளைதளங்கள் போன்றவற்றை ஆராய்வதும் அவசியம். பெற்றோரின் கடமை இதுவென்றாலும் கூட ஆசிரியாகளும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஊட்ட வேண்டும் என்கின்றனர்.
அதற்காக கழுத்தை அறுப்பது, வீட்டுக்குத் தீ வைப்பது போன்றவற்றை செய்கிறர்வர்கள் நல்ல நண்பர்களாக இருந்திருக்க முடியாது.
000