மே.29
துருக்கில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் 52.14சதவீத வாக்குகளைப் பெற்று அதிபர் எர்டோகன் 3வது முறையாக மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளார்.
துருக்கியில் 2003-ம் ஆண்டு முதல் பிரதமராக இருந்த தாயீப் எர்டோகன் 2014-ல் அந்தபதவியை கலைத்து விட்டு அதிபராக பதவி ஏற்றார். அன்றுமுதல் அவர் சர்வாதிகாரி போல செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் இருந்துவருகிறது.
கடந்த 20 ஆண்டுகளாக துருக்கியில் எர்டோகன் ஆட்சி நடத்திவரும் நிலையில், கடந்த 14ம் தேதி அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில், போட்டியிட்ட வேட்பாளர்கள் யாருமே 50 சதவீதத்திற்கும் மேல் வாக்குக்களைப் பெறவில்லை. எர்டோகன் 49.50 சதவீதம் வாக்குகளும், கூட்டணி கட்சி வேட்பாளர் கெமால் கிளிக்டரோக்லு 44.79 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்றனர்.
இரு தரப்பினருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், நேற்று 2வது கட்ட வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இந்தத் தேர்தலில் 52.14 சதவீத வாக்குகள் பெற்று எர்டோகன் மீண்டும் வெற்றிபெற்று, 3வது முறையாக துருக்கி அதிபர் பதவியை கைப்பற்றியுள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட கெமல் கிலிக்டரோக்லு 47.86 சதவீத வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்தார்.
20 ஆண்டுகால ஆட்சியை மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீட்டித்துள்ள எர்டோகனின் இந்த தொடர் வெற்றி வரலாற்றில் இடம்பிடித்துள்ளது. ஏற்கனவே துருக்கி குடியரசின் நிறுவனர் முஸ்தபா கெமால் அட்டதுர்க்கின் 15 ஆண்டு ஜனாதிபதி பதவி சாதனையை எர்டோகன் ஏற்கனவே முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.