மே.29
இந்தியாவில் எடை குறைந்த துருப்பிடிக்காத நவீன வடிவ சமையல் எரிவாயு சிலிண்டரை இந்தியன் ஆயில் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
இந்தியாவில் உள்ள வீடுகள், ஓட்டல்கள், வர்த்தக நிறுவனங்களுக்கு இன்டேன் என்ற பெயரில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனம் சிலிண்டர்களை விநியோகித்துவருகிறது. அதன்படி, வீடுகளுக்கு 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர்களும், வர்த்தகப் பயன்பாட்டுக்கு 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர்களும் வழங்கப்பட்டுவருகிறது.
இந்நிலையில், புதிதாக எடை குறைந்த அழகிய வடிவிலான புதிய ‘காம்போசிட்’ சிலிண்டரை இந்தியன் ஆயில் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
இந்த சிலிண்டர் பாலிமர் ஃபைபர் கிளாஸ், அதிக அடர்த்தி வாய்ந்த பாலி எத்திலின் தெர்மோ பிளாஸ்டிக்காலான வெளிப்புற ஜாக்கெட் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மிகவும் உறுதித் தன்மை கொண்ட இந்த சிலிண்டர், வாயுக்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டாலும் வெடிக்காத வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள இரும்பிலான சிலிண்டருடன் ஒப்பிடுகையில் இந்த சிலிண்டர் 50 சதவீதம் எடை குறைவானது. எனவே, பெண்களே இந்த சிலிண்டரை எளிதாக கையாள முடியும். அதுமட்டுமின்றி, இந்த சிலிண்டர் துருப்பிடிக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய வகை சிலிண்டரை பெற விரும்பும் புதிய வாடிக்கையாளர்கள் ரூ.3,500 பாதுகாப்பு வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும் என்றும், பழைய வாடிக்கையாளர்கள் ஏற்கெனவே செலுத்திய காப்புத் தொகையுடன், புதிய பாதுகாப்பு வைப்புத் தொகையுடன் எவ்வளவு வித்தியாசம் உள்ளதோ அத்தொகையை செலுத்தினால் போதுமானது என்று இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்தளள்து. மேலும், புதிய சிலிண்டர்களை பெற 86556 77255 என்ற எண்ணுக்கு மிஸ்டுகால் கொடுத்து முன்பதிவு செய்துகொள்ளலாம் என்றும் இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.