அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவருடைய பாதுகாப்பு காரணங்களுக்காக விமான நிலையத்தில் விமானம் நிற்கும் இடம் வரை சொந்த காரிலேயே செல்வதற்கான சிறப்பு அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ளது.
இந்த அனுமதி கிடைத்து உள்ளதை அடுத்து அவர், நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் விமானம் நிறுத்தப்பட்டு இருக்கும் இடம் வரை தனது காரிலேயே செல்வதற்கான வாய்ப்பைப் பெற்று இருக்கிறார். பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமிக்கு இந்த அனுமதியை கொடுத்துள்ளதாக விமான போக்குவரத்துத் துறை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
பொதுவாக விமான நிலையத்தில் பயணிகள் விமான ஓடுதளம் வரை அந்த விமான நிறுவனத்தின் பஸ்சில் சென்று விமானத்தில் ஏற வேண்டியிருக்கும். மிக மிக முக்கியமான பிரமுகர்களுக்கு மட்டும் பாதுகாப்பு காரணங்களுக்காக விமானம் நிறுத்தப்பட்டு இருக்கும் இடம் வரை காரிலேயே செல்ல மத்திய விமான போக்குவரத்து துறை அனுமதி அளிப்பது வழக்கமாக உள்ளது.இப்போது அத்தகைய அனுமதியை எடப்பாடி பழனிசாமிக்கும் விமான போக்குவரத்துறை கொடுத்து இருக்கிறது.
எடப்பாடி பழனிசாமி கடந்த மார்ச் மாதம் மதுரை விமான நிலையத்தில் விமானம் நிறுத்தப்பட்டுள்ள இடத்தில் இருந்து பஸ்சில் வெளியில் வந்தார்.. அப்போது அவருடன் பயணம் செய்த நபர் எடப்பாடி பழனிசாமியை பார்த்து துரோகி என்று நேரடியாக விமர்சனம் செய்தார். உடனே பழனிசாமியின் பாதுகாவலர் அந்த நபரின் செல்போனை பறித்தார். பின்னர் விமான நிலையத்தில் அதிமுகவினரும் அந்த நபரை தாக்கினார்கள். இது தொடர்பான வீடியோ பதிவு, சமூக வளை தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுபோன்ற நிகழ்வுகள் இனியும் நடைபெறாமல் தடுத்து எடப்பாடி பழனிசாமி பாதுகாப்பாக பயணம் செய்வதற்காக மத்திய விமான போக்குவரத்துத் துறை சிறப்பு அனுமதியைக் கொடுத்து உள்ளதாக தெரிகிறது.
000