ஏப்ரல்.19
தூத்துக்குடியில் வரும் 21ம் தேதி மாபெரும் புத்தகக் கண்காட்சி, தொல்லியல்துறை கண்காட்சி மற்றும் பாரம்பரிய உணவுத் திருவிழா நடைபெறவுள்ளது. கண்காட்சி நடைபெறவுள்ள இடத்தை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடியில் கோடை விடுமுறையை முன்னிட்டு மாணவர்களின் சிந்தனையையும், வாசிப்பு திறனையும் வளர்க்கும் விதமாக மாவட்ட நிர்வாகம் மற்றும் பபாசியுடன் இணைந்து மாபெரும் புத்தக கண்காட்சி நடத்தப்படவுள்ளது. இந்தக் கண்காட்சி வரும் 21-ம் தேதி முதல் மே மாதம் ஒன்றாம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்நிலையில், புத்தக கண்காட்சி அமைய உள்ள இடத்தை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர், ஏப்ரல் 21 முதல் மே மாதம் ஒன்றாம் தேதி வரை தூத்துக்குடியில் 110 அரங்குகள் அமைக்கப்பட்டு மாபெரும் புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது. இந்த புத்தக கண்காட்சியுடன் பொருனை நாகரிகத்தை விளக்கும் வகையில், தமிழர்களின் கலாச்சாரம், பாரம்பரியம் ஆகியவற்றை விளக்கும் வகையிலும், தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர், சிவகலை, கொற்கை உள்ளிட்ட பகுதிகளில் தொல்லியல்துறை சார்பில் இதுவரை கண்டெடுக்கப்பட்டுள்ள முதுமக்கள் தாழிகள், பல்வேறு பழங்காலத்து நாணயங்கள், சிற்பங்கள் அடங்கிய மாபெரும் கண்காட்சியும் நடக்க உள்ளது. இதன் மூலம் தமிழர்களின் வரலாற்றை மாணவர்கள் முதல் பல்வேறு தரப்பினரும் தெரிந்துகொள்ள முடியும்.
அதுமட்டுமின்றி, புத்தக கண்காட்சி நடைபெறும் நாட்களில் தமிழகத்தில் சிறந்த ஆளுமைகள், சிறந்த எழுத்தாளர்கள் பங்குபெரும் சொற்பொழிவுகளும், நெய்தல் கலை விழா மற்றும் 40 அரங்குகளுடன் கூடிய பாரம்பரிய உணவு திருவிழாவும் நடைபெறவுள்ளது. தூத்துக்குடியில் நடைபெறும் இந்த மாபெரும்புத்தக கண்காட்சியை 5 லட்சம் முதல் 6 லட்சம் வரையிலான பார்வையாளர்கள் பார்த்து பயன்பெற வாய்ப்புள்ளது.
இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார்.