ஏப்ரல்.26
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாகி அதிகாரி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்ய 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள முறப்பநாடு கிராம நிர்வாக அதிகாரியாக லூர்தர் பிரான்சிஸ் என்பவர் பணிபுரிந்து வருகிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த பகுதியில் அவர் ரோந்து செல்லும்போது தாமிரபரணி ஆற்றில் இருந்து ராமசுப்பு என்பவர் இருசக்கர வாகனத்தில் ஆற்று மணலை கடத்திச் சென்றுள்ளார். அப்போது கிராம நிர்வாக அதிகாரியை பார்த்தவுடன் ஆற்று மணலை போட்டுவிட்டு இருசக்கர வாகனத்தில் மின்னல் வேகத்தில் அவர் சென்றுள்ளார்.
இது குறித்து கிராம நிர்வாக அதிகாரி லூர்து பிரான்சிஸ் முறப்பநாடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவந்தனர். இந்த நிலையில், நேற்று கிராம நிர்வாக அதிகாரி அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, அங்குபுகுந்த இரண்டு பேர் அரிவாளால் சரமாரியாக லூர்தர் பிரான்சிசை வெட்டிவிட்டு, என்மீது எப்படி காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம் என தெரிவித்து அங்கிருந்து தப்பி சென்றனர்.
இதில், படுகாயம் அடைந்த கிராம நிர்வாக அதிகாரி லூர்து பிரான்சிஸ் நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்தை பார்வையிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மேலும் கிராம நிர்வாக அதிகாரி கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளைப் பிடிக்க நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, கிராம நிர்வாக அதிகாரி படுகொலையைக் கண்டித்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கிராம நிர்வாக அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருவது குறிப்பிடத்தக்கது.