தூத்துக்குடி மாநகராட்சியில் நடைபெற்றுவரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் ஜூன் மாதத்திற்குள் நிறைவடையும் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாநகராட்சியில் சுமார் ஆயிரம் கோடி மதிப்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சிமெண்ட் சாலை, கழிவுநீர் கால்வாய், பூங்கா அமைப்பு உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்றுவருவதாக பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி நிலவிவந்தது.
இந்த நிலையில், தூத்துக்குடி மாநகராட்சி கூட்ட அரங்கில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, ஆயிரம் கோடி செலவில் நடைபெறக்கூடிய இந்தத் திட்டத்திற்கு, 50 சதவீதம் நிதி ஒன்றிய அரசின் சார்பிலும், 50 சதவீதம் மாநில அரசு மூலமாகவும் ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
ரூ. 952 கோடிக்கான பணிகள் தொடங்கப்பட்டு அதன் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தப் பணிகள் தற்போது நிறைவடையும் தருவாயில் இருப்பதாக அவர் தெரிவித்தார். ஒரு சில பூங்காக்கள், சாலைகள் போன்றவற்றின் பணிகள் நிறைவடைந்து தற்போது மக்கள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டதாக கூறிய எம்.பி. கனிமொழி, மீதமுள்ள பணிகள் ஏப்ரல்-ஜூன் மாதத்திற்குள் முடிவடையும் என்றும் கூறினார். ஏற்கனவே வருட கணக்கில் பணி நடைபெறாமல் இருந்த பணிகளைத் தற்போது விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.