மே.20
தென்னை மரங்களில் ஏற்படும் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள மூலனூர் கிராமத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பில் தென்னை நோய் மற்றும் பூச்சி தாக்குதல் கட்டுப்பாடு மற்றும் உர மேலாண்மை தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது. ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்துகொண்டார். அப்போது, தென்னை மரங்களில் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் கட்டுப்படுத்துவதை குறித்து கையேடுகளையும் விவசாயிகளுக்கு வழங்கினார்.
கருத்தரங்கில் தென்னை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மற்றும் விஞ்ஞானிகள் கலந்து கொண்டு தென்னை மரங்களில் ஏற்படும் பூச்சி தாக்குதல் மற்றும் நோய் தாக்குதலை கட்டுப்படுத்தவது குறித்து செயல் விளக்கத்துடன் விவசாயிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சாமிநாதன், கொங்கு மண்டலத்தில் கூலித்தொழிலாளர்கள் பற்றாக்குறை, கூலி உயர்வு, போதிய விலை இல்லை போன்ற காரணத்தால் குறுகிய கால பயிர் சாகுபடியில் விவசாயத்தில் கட்டுபடியாகாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தென்னை சாகுபடி மூலம் விவசாயிகளின் வாழ்வாதரத்தை பெருக்கும் வகையில் கருத்தரங்கம் நடத்தப்பட்டு வருகிறது. தென்னை சாகுபடியில் ஏற்படும் பூச்சி தாக்குதல், வாடல் நோய்களை ஒழிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு அதற்கான இலக்கை எட்டுவோம் என்றார்.