தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் அப்பதவியில் இருந்து விலகியுள்ள நிலையில், அடுத்த தலைவரை தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
சரத் பவார், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி 1999ல் தேசியவாத காங்கிரஸ் கட்சியை தொடங்கினார். அது முதல் அந்த கட்சியின் தலைவராக பதவி வகித்து வந்தார். இந்நிலையில், மும்பையில் நேற்று அவரது புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில், யாரும் எதிர்பாராத வண்ணம், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். மேலும், சரத் பவார் கூறுகையில், எனது அரசியல் பயணம் 1960 மே 1ம் தேதி தொடங்கியது, அதன் பின்னர் கடந்த 63 ஆண்டுகளாக இடைவேளையின்றி தொடர்ந்து மகாராஷ்டிரா மற்றும் இந்தியாவிற்கு பல்வேறு பதவிகளில் பணியாற்றி வருகிறேன். எனவே ஒரு படி பின்வாங்குவது அவசியம். அதனால், தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன் என்று தெரிவித்தார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக சரத்பவார் அறிவித்து இருப்பது தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், சரத் பவார் பதவியை ராஜினாமா செய்த நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. மும்பையில் உள்ள ஒய் பி சவான் மையத்தில் நடைபெறும் ஆலோசனையில் கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு தான் அடுத்தகட்ட நடவடிக்கை தெரியவரும் என கூறப்படுகிறது.