மே.5
தேசியவாத காங்கிரஸின் (என்சிபி)தலைவர் பதவியிலிருந்து சரத்பவார் அண்மையில் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அக்கட்சிக்கு புதிய தலைவரை தேர்வு செய்வது குறித்து கட்சியின் உயர்நிலைக் குழு இன்று கூடி முக்கிய ஆலோசனை நடத்துகிறது.
கடந்த 1999-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட தேசியவாத காங்கிரஸ் கட்சியில் 24 ஆண்டுகள் தலைவராக சரத் பவார் பதவி வகித்துவந்தார். இந்த சூழலில் கட்சியை கைப்பற்றுவதில் சரத்பவார் மகள் சுப்ரியா சுலேவுக்கும், அண்ணன் மகன் அஜித் பவாருக்கும் இடையே மோதல் உருவானது.
தற்போது மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸுக்கு 53 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதில் ,40 எம்எல்ஏக்களுடன் அஜித்பவார் பாஜகவில் சேரவுள்ளதாக அண்மையில் தகவல்கள் வெளியாயின. இதனால் தேசியவாத காங்கிரஸ் கட்சி உடையும் நிலை ஏற்பட்டது. இந்த சூழலில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக கடந்த 2-ம் தேதி சரத்பவார் அதிரடியாக அறிவித்தார்.
இதைத் தொடர்ந்த, கட்சிக்கான புதிய தலைவரை தேர்வு செய்ய பிரபுல் படேல், சுனில் தாட்கரே, கே.கே.சர்மா, பி.சி.சாக்கோ, அஜித் பவார், ஜெயந்த் பாட்டீல், சுப்ரியா சுலே, சாகன் புஜ்பால், திலீப் பாட்டீல், அனில் தேஷ்முக், ராஜேஷ் டோபி, ஜிதேந்திர அத்வாத், ஹாசன் முஷ்ரிப், தனஞ்ஜெய் முண்டே, ஜெய்தேவ் கெய்க்வாட் ஆகிய 15 பேர் அடங்கிய உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு ஆலோசனை நடத்தி கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்யும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி தேசியவாத காங்கிரஸின் புதிய தலைவரை தேர்வு செய்வது குறித்து ஆலோசனை நடத்த கட்சியின் உயர்நிலைக் குழு இன்று கூடுகிறது.
இதனிடையே, கட்சித் தலைவர் பதவியில் சரத் பவார் தொடர வேண்டும் என்று வலியுறுத்தி அந்த கட்சியின் மூத்த தலைவர்கள், தொண்டர்கள் மும்பையில் உள்ள சரத் பவாரின் வீட்டின் முன்பு நேற்று குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது பேசிய சரத்பவார், “தொண்டர்களின் கருத்துகளுக்கு மதிப்பு அளிக்கிறேன். புதிய தலைவரை தேர்வு செய்வது தொடர்பாக கட்சியின் உயர்நிலைக் குழு எடுக்கும் முடிவை ஏற்றுக் கொள்வேன்” என்று தெரிவித்தார்.
உயர்நிலைக்குழுக் கூட்டத்தில் சரத்பவாரே மீண்டும் தலைவராக நியமிக்கப்படுவாரா? அல்லது புதிதாக தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவாரா? என்ற எதிர்பார்ப்பு தேசியவாத காங்கிரஸ் கட்சியினரிடையே உருவாகியுள்ளது.