தேனியில் உலா வந்த ‘அரிக்கொம்பன்’ யானை..! மயக்க ஊசி செலுத்திப் பிடித்த வனத்துறை அதிகாரிகள்..!!

ஜூன்.5

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் கடந்த ஒரு வாரமாக உலா வந்து மக்களை அச்சுறுத்திய அரிக்கொம்பன் யானை, சின்னமனூர் அருகே மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.

தேனி மாவட்டத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்த ‘அரிக்கொம்பன்’ யானையைப் பிடிப்பதற்காக கடந்த 28-ந் தேதி சுயம்பு, உதயன், அரிசி ராஜா (எ) முத்து ஆகிய 3 கும்கி யானைகள் கோவை மாவட்டம் டாப் சிலிப்பில் இருந்து லாரி மூலம் தனித்தனியாக கொண்டுவரப்பட்டன.

பின்னர் அவை கம்பம்-கூடலூர் சாலையில் தனியார் திருமண மண்டபம் அருகே உள்ள புளியந்தோப்பில் நிறுத்திவைக்கப்பட்டன. இந்த கும்கி யானைகளை பார்ப்பதற்காகவும், அதனுடன் புகைப்படம் எடுத்து கொள்வதற்காகவும் ஏராளமான பொதுமக்கள் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து கும்கி யானைகள் 3ம் கம்பம் வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்நிலையில், உத்தமபாளையம் அருகே உள்ள சண்முகநாதர் கோவில் வனப்பகுதியில் அரிக்கொம்பன் யானை சுற்றித்திரிவதாக தகவல் கிடைத்தது. அந்த யானை வனத்துறையினரிடம் சிக்காமல் உலா வந்த நிலையில் வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்திய பிறகுதான் கும்கி யானைகளுக்கு வேலை என்பதால் கும்கி யானைகள் கடந்த சில நாட்களாக கம்பம் வனத்துறை அலுவலகத்திலேயே நிறுத்திவைக்கப்பட்டு பாரமரிக்கப்பட்டு வந்தன.

இதைத் தொடர்ந்து, கம்பம் அருகே சண்முகா அணையில் அரிக்கொம்பன் முகாமிட்டுள்ளதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. கடந்த 7 நாட்களாக தேனியில் உலா வந்த அரிக்கொம்பன் யானை, தேனி சின்னமனூர் அருகே 2 மயக்க ஊசிகள் செலுத்தி வனத்துறையினரால் பிடிக்கப்பட்டுள்ளது. தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள மூன்று கும்கி யானைகளின் உதவியோடு, அரிக்கொம்பன் யானை லாரி மூலம் கொண்டு செல்லப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *