பக்கத்து மாநிலமான கேரளாவின் முன்னாள் முதல் -அமைச்சர் உம்மன் சாண்டியை ’கேரள கருணாநிதி’ என சொல்லலாம். கலைஞர் போன்று இவரும் , தேர்தல்களில் தோற்றது இல்லை.
52 ஆண்டுகள் தொடர்ந்து ஜெயித்தவர்.
சில மாதங்களுக்கு முன்னர் தொண்டை பகுதியில் ஏற்பட்ட புற்றுநோய் பாதிப்பு காரணமாக ஜெர்மனி சென்று சிகிச்சை பெற்று வந்தார்.
சில நாள்களாக உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த உம்மன் சாண்டி, பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலையில் காலமானார். அவருக்கு வயது 79.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான உம்மன் சாண்டி கேரளாவில் 2004- 2006, 2011 – 2016 என இரண்டு முறை முதலமைச்சராக பதவி வகித்துள்ளார்.
1970ஆம் ஆண்டில் முதன் முதலாக கோட்டயம் மாவட்டம் புதுப்பள்ளி தொகுதியில் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார்.
அப்போது முதல் தொடர்ந்து 52 ஆண்டுகளாக அந்ததொகுதியின் எம்எல்ஏவாக இருந்து வந்துள்ளார்.
அவரது மறைவையொட்டி கேரளாவில் இன்று பொது விடுமுறை விடப்பட்டுள்ளது. இரண்டு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என கேரள அரசு தெரிவித்துள்ளது.
அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் இன்று செயல்படாது .இறுதிச் சடங்கு வியாழக்கிழமை நடைபெற இருக்கிறது.
000