JUNE 20,23
மாமன்னன் படத்துடன் நடிப்பதை விட்டு விலக முடிவு செய்திருக்கும் ப் உதயநிதி ஸ்டாலினுக்கு ஏஞ்சல் மூலம் புதுப் பிரச்சனை ஏற்ப்பட்டு உள்ளது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமான்னன் படத்தில் நடித்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். வைகைபுயல் வடிவேலு, ஃபஹத் ஃபாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசை வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் பிரமாண்டமாக நடந்தது.
இந்நிலையில் ஏஞ்சல் என்ற படத்தால் மாமன்னன் படத்திற்கு பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. ஓ.எஸ்.டி. ஃபிலிம்ஸ் தயாரிப்பில் கே.எஸ். அதியமான் இயக்கத்தில் கடந்த 2018ம் ஆண்டு ஏஞ்சல் படத்தில் நடித்து வந்தார் உதயநிதி ஸ்டாலின். அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பாயல் ராஜ்புட் நடித்தார். கயல் படம் புகழ் ஆனந்தி பேயாக நடித்து வந்தார். படத்திற்கு டி. இமான் இசையமைத்தார். ஆனால் அந்த படம் இன்னும் ரிலீஸாகவில்லை. இந்நிலையில் ஓ.எஸ்.டி. ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான ராம சரவணன் என்பவர் மாமன்னன் படத்திற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது,
எங்களுடைய ஏஞ்சல் படத்தின் ஷூட்டிங் கடந்த 2018-ம் ஆண்டு துவங்கி நடந்தது. 80 சதவீத காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன. 20 சதவீத காட்சிகளே படமாக்கப்பட வேண்டியுள்ளது. ஏஞ்சல் பட வேலையை நிறைவு செய்யாமல் மாமன்னன் படத்தில் நடித்திருக்கும் உதயநிதி ஸ்டாலின் அந்த படத்துடன் நடிப்புக்கு முழுக்கு போடுவதாக கூறியிருக்கிறார். அவர் 8 நாட்கள் கால்ஷீட் கொடுக்க வேண்டும். அதை செய்யாமல் இழுத்தடிக்கிறார். எங்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டு உதயநிதி ஸ்டாலின் நடிக்க வேண்டும். மேலும் இத்தனை காலமாக இழுத்தடித்ததற்காக ரூ. 25 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மாமன்னன் படத்துடன் நடிப்பை நிறுத்த முடிவு செய்திருக்கும் நேரத்தில் இப்படி ஒரு புது புகார் எழுந்திருக்கிறது. ஏஞ்சலுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார் உதயநிதி ஸ்டாலின் என சினிமா ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
“அண்ணா, ஏஞ்சல் படத்தில் நடித்து முடித்துவிடுங்கள். உங்களை மேலும் ஒரு முறை பெரிய திரையில் பார்த்து ரசிக்க எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். ஏஞ்சல் பட பிரச்சனையும் தீர்ந்துவிடும்” என உதயநிதிக்கு ரசிகர்கள் சிலர் வேண்டுகோளும் வைத்துள்ளனர்.
இதற்கிடையே ஏஞ்சலா, அப்படி ஒரு படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்தாரா என சமூக வலைதளவாசிகள் கூகுள் செய்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அட ஆமாம்பா, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் நடந்த படப்பிடிப்பு தானே ஏஞ்சல். அந்த படம் 2019-ம் ஆண்டே ரிலீஸாகும் என்றார்களே, இன்னும் வரவே இல்லையா என்கிறார்கள் சமூக வலைதள வாசிகள்.
அரசியலில் முழுமையாக ஈடுபடவே நடிப்புத் துறையை விட்டு விலகப் போவதாக உதயநிதி அறிவித்து இருந்தார். இந்நிலையில் 8 நாட்கள் ஒதுக்கிக் கொடுத்து ஏஞ்சல் படப்பிடிப்பை நிறைவு செய்வாரா? என்ற கேள்வி எழுந்து இருக்கிறது.
000