ஜுலை,29-
மக்களவைத் தேர்தலில் ஆளும் பாஜகவை வீழ்த்தியே தீருவது என கங்கணம் கட்டிக்கொண்டு கோதாவில் குதித்துள்ள எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகள் வேகமெடுத்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள 26 கட்சிகள் ஒரே அணியில் இணைந்துள்ளன. எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம் பீகார் தலைநகர் பாட்னாவில் கடந்த மாதம் 23 ஆம் தேதி நடந்தது, அந்த மாநில முதலமைசர் நிதிஷ்குமார், முதல் கூட்டத்துக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
இரண்டாவது கூட்டம் காங்கிரஸ் ஆட்சி நடக்கும் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த 17, 18 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.காங்கிரஸ் கட்சி இந்த கூட்டத்துக்கான ஏற்பாடுகளை செய்தது. அனைத்து தலைவர்களுக்கும் சோனியாகாந்தி விருந்தளித்தார்.இந்த கூட்டத்தில்தான் எதிர்க்கட்சிகள் அணிக்கு ‘இந்தியா ‘என பெயர் சூட்டப்பட்டது.
மூன்றாவது கூட்டம் மகாராஷ்டிர மாநில தலைநகர் மும்பையில் அடுத்த மாதம் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரும், சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) தலைவர் உத்தவ் தாக்கரேயும் இந்த ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்த கூட்டத்தில், கூட்டணி கட்சிகளிடையே தொகுதிப்பங்கீடு செய்து கொள்வது குறித்து முடிவெடுக்கப்படுகிறது.
000