கொடைக்கானலில் தொடர் விடுமுறையை முன்னிட்டு இரண்டாவது நாளாக குவிந்த சுற்றுலாப் பயணிகள் வருகையால் போக்குவரத்து முடங்கியது.
கொடைக்கானலில் கடந்த இரண்டு வாரங்களாக பரவலாக தினமும் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்து வருகிறது. இந்த மழையால் குளுமையான சீதோஷ்ன நிலை ஏற்பட்டு வருகிறது. இதனைத்தொடர்ந்து, ஈஸ்டர் பண்டிகை தொடர் விடுமுறையை முன்னிட்டு கொடைக்கானலில் அதிகமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். சுற்றுலா இடங்களான வெள்ளிநீர் வீழ்ச்சி,பில்லர் ராக்,மோயர் பாயிண்ட்,ரோஜாத் தோட்டம்,தாவரவியல் பூங்கா,பைன் பாரஸ்ட், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் தென்பட்டனர்.
இதேபோல், ஏரியில் படகு சவாரியும், ஏரிச்சாலையை சுற்றி சைக்கிள், குதிரை சவாரியும் செய்து சுற்றுலாப் பயணிகள் மகிழ்ந்தனர். இதனால் செவன்ரொடு,லாஸ்காட் சாலை, அப்சர்வேட்டரி, ஏரிச்சாலை, பூங்கா சாலை மியூசியம் சாலை,டிப்போ சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 3 மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை தொடர்ந்து அதிகமாக இருப்பதால், தங்கும் விடுதிகளின் உரிமையாளர்கள், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். விடுமுறை நாட்களில் வழக்கம்போல அதிகமான சுற்றுலாப் பயணிகள் காணப்படுகின்றனர். போக்குவரத்தை சரி செய்வதற்கும், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கூடுதல் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.