ஜூன்,26. சிதம்பரம் கோயில் கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை என தீட்சிதர்கள் வைத்த பதாகையை போலிஸ் துணையுடன் அதிகாரிகள் அகற்றியபோது பதற்றமான சூழல் நிலவியது.
தமிழ்நாட்டில் முக்கியமான கோயில்கள் அனைத்தும் அறநிலையத்துறை கட்டுப் பாட்டில் இருக்கையில் சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோயில் மட்டும் தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது தெரிந்ததே.
இந்த நிலையில் ஆனித் தரிசனம் நடைபெறுவதற்கு முதல் நாள் தீட்சிதர்கள் திடீரென கனகசபை மீது ஏறிவந்து பக்தர்கள் வழிப்படக்கூடாது என்று பதாகை ஒன்றை வைத்ததுதான் பிரச்சினைக்கு காரணம்.
கனகசபை என்பது நடராஜர் வீற்றிருக்கும் மூல இடத்திற்கு எதிரே உள்ள இடமாகும்.
இதற்கு கடுமையான எதிர்ப்புகள் ஏற்பட்ட போதும் தீட்சிதர்கள் அந்த அறிவிப்பை அகற்றவில்லை. இதையடுத்து
போலீசார் உடன் கோட்டாட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்ட வருவாய் அதிகாரிகள், மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் சென்று பதாகையை அகற்றினர்.
இதற்கு தீட்சிதர்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வாக்குவாதம் செய்தனர்.
இதன் பின்னர் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
பதாகையை அகற்றச் சென்ற அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்ததாக அறநிலையத்துறை அதிகாரி சரண்யா அளித்த புகாரின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.