ஜனவரி-22,
மேற்கு வங்கத்தில் நந்திகிராம் நிலப்பிரச்சினையை பயன்படுத்தி மம்தா பானர்ஜி ஆட்சியை பிடித்தது போன்று, பரந்தூர் விமான நிலையப் பிரச்சினையை பெரிதாக்கி நடிகர் விஜய் ஆட்சியைப் பிடிப்பதற்கு முயற்சிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இரு தினங்களுக்கு முன்பு நடிகர் விஜய் சென்று வந்ததை அடுத்து சென்னைக்கான புதிய விமான நிலையம் திட்டமிட்டபடி பரந்தூரில் அமையுமா அல்லது வேறு இடத்திற்கு மாற்றப்படுமா என்ற விவாதம் மீண்டும் உருவாகி இருப்பதும் பிரச்சினை சூடுபடுத்தி இருக்கிறது.
சென்னையில் இப்போது செயல் படும் விமான நிலையம் நகரத்திற்கு அருகிலேயே உள்ளது. நகரின் மையமான அண்ணா சாலையில் இருந்து அரை மணி நேரத்தில் இந்த விமான நிலையத்தை அடைந்து விட முடியும்.
கடந்த 2005- ஆம் ஆண்டு விமான நிலையத்தை விரிவுபடுத்த திட்டமிட்டபோது பின்புறம் உள்ள கிரகம்பாக்கத்தில் இருந்த விவசாய நிலத்தை கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டது. அங்கு ஏற்பட்ட எதிர்ப்புக் காரணமாக அந்த திட்டம் அப்படியே கைவிடப்பட்டது. அந்த எதிர்ப்பை சமாளித்து விமான நிலையத்தை விரிவுப்படுத்தி இருந்தால் இப்போது புதிய விமான நிலையம் கட்டுவதற்கு இடத்தை தேட வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருக்காது.
சென்னையில் இருந்து சுமார் 50 கிலோ மீடட்ர் தொலைவில் புதிய விமான நிலையம் கட்டுவதற்கு பரந்தூர், ஏகனாபுரம் கிராமங்களில் தேர்வு செய்யப்பட்டு உள்ள இடம் விவசாயம் நிலம் ஆகும். அந்த நிலத்தை விட்டுக் கொடுக்க மறுத்து கிராம மக்கள் நடத்தும் போராட்டம் 900 நாட்களை கடந்து உள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் அங்கு சென்று கிராம மக்களுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளதை அடுத்த போராட்டம் மீண்டும் வேகம் எடுத்து உள்ளது. அவர். பரந்தூரில் விமான நிலையம் கட்டுவதற்கு ஒரு போதும் அனுமதிக்கப் போவதில்லை என்று தெரிவித்து உள்ளார். அதிக பாதிப்பு இல்லாததும் விவசாயம் நடைபெறாமல் கிடப்பதுமான நிலத்தை தேர்வு செய்து விமான நிலையம் கட்டவேண்டும் என்று விஜய், மத்திய – மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்து உள்ளார்.
சென்னைக்கு தெற்கே திருக்கழுகுன்றம் அருகே அரசுக்கு சொந்தமான 5000 ஏக்கர் நிலம் பயன்படுத்தாமல் கிடக்கிறது. விவசாயமும் நடைபெறவில்லை. அங்கு புதிய விமான நிலையத்தைக் கட்டலாம் என்ற யோசனை மீண்டும் வெளிச்சத்திற்கு வந்து உள்ளது.
மேலும் திருக்கழுகுன்றம் அருகே புதிய விமான நிலையம் கட்டப்பட்டால் சென்னை – திருச்சி தேசீய நெடுஞ்சாலை பக்கத்தில் உள்ளது. சென்னை – விழுப்புரம் ரயில பாதையும் அருகில் இருக்கிறது. கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து புதிய விமான நிலையத்தை எளிதில் அடையளாம். திரிசூலத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கப்பட உள்ள மெட்ரோ ரயில பாதையை அப்படியே குறைந்த செலவில் புதிய விமான நிலையம் வரை நீட்டித்துவிடலாம் போன்ற சாதகமான அம்சங்கள் முன் வைக்கப்படுகின்றன.
இதனால் புதிய விமான நிலையம் அமைவதற்கு சிறந்த இடம் பரந்தூரா அல்லது திருக்கழுகுன்றமா என்ற விவாதம் மீண்டும் சூடுபிடித்து உள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் புத்ததேவ் பட்டாச்சாரியா தலைமையிலான இடது சாரி கூட்டணி ஆட்சியில் இருந்த போது மிட்னாப்பூர் மாவட்டத்தில் நந்திகிராம் என்ற இடத்தில் இந்தோனசிய நிறுவனம் ஒன்று ராசயண ஆலைக் கட்டுவதற்கு அனுமதி தரப்பட்டது. இதற்கு அந்த வட்டார மக்களிடையே கடுமையான எதிர்ப்பு மூண்டது. சிலா் உயிர் இழந்தனர். பின்னர் இந்த திட்டம் கைவிடப்பட்டாலும் அடுத்து வந்த சட்டசபை தேர்தலில் இடது சாரி கூட்டணி தோல்வியை சந்திக்க நேரிட்டது. திரினாமூல் காங்கிரஸ் முதன் முறையாக ஆட்சிக்கு வந்தது.
மம்தா பானர்ஜி, நந்திகிராம் பிரச்சினையை பெரிதுப்படுத்தி கடந்த 2011-ல் மேற்கு வங்கத்தின் ஆட்சியை பிடித்தது போன்று நடிகர் விஜய், பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பை பயன்படுத்தி ஆட்சியை பிடிக்க முயற்சிக்கலாம் என்ற கருத்து உருவாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் பிரசித்தமான வசனம் ஒன்று உண்டு. அது “அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் “ என்பது.
*