ஏப்ரல் 18
“பகவந்த் மான் ஒரு பெரிய மாநிலத்தின் முதல்வர். அவர் காலிஸ்தானுக்கு எதிராக நல்ல நடவடிக்கை எடுத்திருக்கிறார்.” – ஹிமந்தா பிஸ்வா சர்மா
காலிஸ்தான் ஆதரவாளரான அம்ரித்பால் சிங் காலிஸ்தான் தனிநாடு கோரிக்கையை வலியுறுத்தி வருகிறார். அவரை கைதுசெய்ய பஞ்சாப் அரசு கடும் முயற்சிகளை மேற்கொண்டது. இதற்கிடையே காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித்பால் சிங் பஞ்சாபிலிருந்து தப்பியோடிவிட்டதாகக் கூறப்படுகிறது.
அவரைக் கைதுசெய்ய பஞ்சாப் காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது. இந்த நிலையில், அஸ்ஸாம் மாநில பா.ஜ.க முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா காலிஸ்தானி ஆதரவு குழுவுக்கு எதிராக பஞ்சாப் முதல்வரின் நடவடிக்கையை பாராட்டியிருக்கிறார்.
இது குறித்து அவர் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில்,” காலிஸ்தானிகளுக்கு எதிராக சரியான நேரத்தில், சரியான நடவடிக்கையை எடுத்ததற்காக பஞ்சாப் முதலமைச்சருக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இந்த விஷயத்தில் எனக்கு எந்த அரசியல் சிக்கலும் இல்லை. அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி எனும் ஒரு நகராட்சியின் முதல்வர். ஆனால் பகவந்த் மான் ஒரு பெரிய மாநிலத்தின் முதல்வர். அவர் காலிஸ்தானி ஆதரவு குழுவுக்கு எதிராக நல்ல நடவடிக்கை எடுத்திருக்கிறார்.
பகவந்த் மான் எப்படி அம்ரித்பால் சிங் அணிக்கு எதிராக எவ்வாறெல்லாம் நடவடிக்கை எடுத்தார் என்பதை அறிந்துக்கொள்ளவும், அவரிடம் ஆலோசனை பெறவும் விரும்புகிறேன். யாராவது நன்றாக வேலை செய்தால், அவர்கள் பாராட்டப்பட வேண்டும். நாட்டுக்கு எதிராக நடந்துக்கொள்பவர்களை ஒடுக்கும் முறை நாட்டுக்கு மிக முக்கியமானது” எனத் தெரிவித்திருக்கிறார்.