ஜுலை,07-
2012 ஆம் ஆண்டு சிம்பு நடித்த ’போடா போடி’ படம் மூலம் தமிழ் திரை உலகில் இயக்குநராக அறிமுகம் ஆனவர் விக்னேஷ் சிவன்.
லேடி சூப்பர்ஸ்டார் என வர்ணிக்கப்படும் நயன்தாராவை , கடந்த ஆண்டு விக்னேஷ் சிவன் திருமணம் செய்து கொண்டார்.
கல்யாணம் ஆன சில மாதங்களிலேயே விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.வாடகைத்தாய் மூலம் குழந்தைகள் பிறந்ததாக நயன்தாரா விளக்கம் அளித்த பின் பிரச்சினை ஓய்ந்தது.
இப்போது நயன்தாரா புதிய விவகாரத்தில் சிக்கியுள்ளார்.அவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஏன்?
விக்னேஷ் சிவனின் சொந்த ஊர் திருச்சி மாவட்டம் லால்குடி.இவரது தந்தை சிவக்கொழுந்து.சிவக்கொழுந்துவுடன் பிறந்தவர்கள் மொத்தம் 9 பேர்.இவர்களில்,சிவக்கொழுந்துவின் தம்பி ( விக்னேஷ் சிவனின் சித்தப்பா) குஞ்சிதபாதம் கோவையில் மனைவியுடன் வசித்து வருகிறார்.
இதயநோயாளியான குஞ்சிதபாதம் லால்குடி காவல்நிலைய துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பரபரப்பான புகாரை தெரிவித்துள்ளார்.
‘எனது அண்ணன் சிவக்கொழுந்து எங்களுக்கு ( சகோதரர்களூக்கு) தெரியாமல் எங்கள் குடும்ப சொத்தை ஏமாற்றி விற்றுள்ளார்.மோசடியாக பொதுச்சொத்தை விற்றது தொடர்பாக சிவக்கொழுந்துவின் வாரிசுகளான அவர் மனைவி மீனாகுமாரி,மகன் விக்னேஷ் சிவன், மருமகள் நயன்தாரா ஆகியோர் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். நிலத்தை மீட்டு எனது பங்கு முழுமையாக கிடைக்க அவர்களை வலியுறுத்த வேண்டும்’ என புகாரில் விக்னேஷ் சிவன் சித்தப்பா கோரியுள்ளார்.
புகார் கொடுத்த குஞ்சிதபாதம் செய்தியாளர்களையும் சந்தித்தார்.‘ எனது இதயத்தில் நான்கு இடங்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டும்.ஏழ்மை நிலையில் உள்ள என்னிடம் பணம் இல்லை. எங்கள் சொத்தை அண்ணன் சிவக்கொழுந்து முறைகேடாக விற்றுள்ளார்.எங்களை ஏமாற்றி விட்டார்.
இது குறித்து மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். சொத்தில் ஒரு பங்கு மட்டுமே சிவக்கொழுந்துவுக்கு உரிமை உள்ளது என்றும், மீதி பங்குகள் 8 பேருக்கு உரியது என்றும் நீதிமன்றம் தீர் ப்பு வழங்கியுள்ளது.இந்த விஷயத்தில் விக்னேஷ் சிவன் மற்றும் அவரது தாயார் மீனாகுமாரி ஆகியோர் உதவினால் மட்டுமே வில்லங்கம் தீரும்.எனது உடல்நிலையை கருத்தில் கொண்டு ,விரைவில் ஆபரேஷன் செய்வதற்காக சொத்தை விற்க விக்னேஷ் சிவன் உதவ வேண்டும்’ என குஞ்சிதபாதம் உருக்கத்துடன் தெரிவித்தார்.
நயன்தாரா தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்தாலும் கூட அவரைச் சுற்றி சர்ச்சைகள் வட்டமிடுவது வாடிக்கையான ஒன்றுதான். இந்த சர்ச்சை எப்படி ஓய்கிறது என்று பார்க்கலாம்.
000