செப்டம்பர்,16-
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் புகார் கொடுத்த நடிகை விஜயலட்சுமி , வழக்கை வாபஸ் வாங்கி விட்டு, பெங்களூரூவுக்கு ஓடி விட்டார்.விவகாரம் முடிந்து போனதால் சீமான் சகஜ நிலைக்கு திரும்பி உள்ளார்.
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சீமான் மீது விஜயலட்சுமி அளித்த புகார் , ஊடகங்களில் கடந்த சில நாட்களாகவே பேசு பொருளாக இருந்தது.
‘’மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சீமான் என்னை திருமணம் செய்து கொண்டார்- நாங்கள் கணவன் – மனைவியாக வாழ்ந்தோம் இதனால் நான் 7 முறை
கருத்தரித்தேன் -ஆனால் என் அனுமதி இல்லாமல் மாத்திரை கொடுத்து சீமான் கருக்கலைப்பு செய்தார்-என்னை ஏமாற்றிய சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என புகாரில் தெரிவித்திருந்தார், விஜயலட்சுமி.
இது குறித்து வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விஜயலட்சுமியிடம் 8 மணி நேரம் விசாரணை நடந்துள்ள நிலையில், இந்த புகார் குறித்து சீமான் ஆஜராகி விளக்கம் தர வேண்டும் என அவருக்கு போலீசார் சம்மன் கொடுத்தனர். சீமான் வளசரவாக்கம் காவல்நிலையத்தில் திங்கள்கிழமை ஆஜராகி விளக்கம் அளிக்க இருந்தார்.
ஆனால் இந்த வழக்கில் நேற்று இரவு திடீர் திருப்பம் உண்டானது. வளசரவாக்கம் காவல் நிலையத்திற்கு வந்த விஜயலட்சுமி, தனது புகார் மனுவை வாபஸ் பெற்றார். இதுதொடர்பாக விஜலட்சுமி அளித்துள்ள விளக்கம்: ’’சீமானை யாரும் எதுவும் செய்ய முடியாது, சக்திவாய்ந்தவராக இருக்கிறார். காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. தனி ஒருவராக போராட முடியவி்ல்லை. சீமானை எதிர்கொள்ள எனக்கு போதிய ஆதரவு யாரிடமும் இருந்து கிடைக்கவில்லை. புகார் மீதான நடவடிக்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை.வழக்கை வாபஸ் பெற யாரும் என்னை கட்டாயப்படுத்தவில்லை. தோல்வியை ஒப்புக்கொண்டு புகாரை வாபஸ் பெறுகிறேன்.மீண்டும் பெங்களூருவுக்கே புறப்படுகிறேன்’ என சொல்லி விட்டு போலீஸ் ஸ்டேஷனில் இருந்து கிளம்பினார்.
விஜயலட்சுமி, தன் மீது அளித்த புகாரை ஆரம்பத்தில் சீமான் சட்டை செய்யவில்லை. இது தொடர்பான கேள்விகளுக்கு அவர் நக்கலாகவே பதில் அளித்து வந்தார்.ஆனால் போலீஸ் பிடி இருகியதால் , நேற்று அவர் கொந்தளித்தார். அரசியல் தலைவர் என்பதையே மறந்து, ’நான் கேடு கேட்ட ரவுடி’என்றெல்லாம் வார்த்தைகளை உதறினார்.அநேக ஊடகங்களில் இது ஒளிப்பரப்பான நிலையில் விஜயலட்சுமி, மிரண்டு போனார்.தனக்கு ஆபத்து ஏற்படலாம் என கருதி
அவர் வழக்கை திரும்ப பெற்றதாக கூறப்படுகிறது.
‘அடி உதவுவது போல் அண்ணன் -தம்பி உதவ மாட்டான்’ என சும்மாவா சொன்னார்கள்?அடிக்கா விட்டாலும் அடியை விட வலி மிக்கதான மிரட்டல், விஜயலட்சுமியை மீண்டும் பெங்களூருவுக்கே துரத்தி விட்டுள்ளது.
000