நாகர்கோயிலில் பாஜகவினருடன் ஏற்பட்ட மோதல் தொடர்பாக இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் 8 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் செல்லும் சாலையில் பாஜகவின் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. இந்நிலையில், ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து, இளைஞர் காங்கிரஸார் நாகர்கோவிலில் உள்ள பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, பாஜக அலுவலகத்தில் இருந்த மாவட்டத் தலைவர் தர்மராஜன் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்டோர் அவர்களை கலைந்து செல்லும்படிகூறினர். இதனால் இருபிரிவினருக்கும் மோதல் ஏற்பட்டது.
மோதல் அதிகரித்த நிலையில் அங்கு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர். அப்போது, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஈஸ்வரன் பாஜகவினரை கட்டுப்படுத்த முயற்சித்தார். வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஒரு நிர்வாகியை இவன் யார் என்று கேட்ட ஈஸ்வரன், நாயே என அந்த நபரை கோபத்தில் திட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகப் பரவிவருகிறது. இந்த மோதல் சம்பவம் தொடர்பாக இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் 8 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.