ஜுலை, 26-
நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியை பேச வைக்கும் நோக்கத்தோடு எதிர்க்கட்சிகள் கொண்டுவந்து உள்ள நம்பிக்கை இல்லாத தீர்மானத்தை சபாநாயகர் ஏற்றுக்கொண்டு உள்ளார்.
நாடளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் கடந்த வாரம் வியாழக்கிழமை தொடங்கிய நாளில் இருந்து எதிர்க்கட்சிகள் மணிப்பூர் பிரச்சினை குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.இதனை ஆளும் பாரதீய ஜனதா அரசு ஏற்றுக்கொண்டாலும் கூட விவாதத்திற்கு உள் துறை அமைச்சர் அமித் ஷா பதிலளிப்பார் என்று தெரிவித்தது. இதனை ஏற்க மறுத்த எதிர்க்கட்சிகள் விவாதத்திற்கு பிரதமர் பதிலளிக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளன. இதனால் ஐந்தாவது நாளாக நாடாளுமன்றத்தில் அமளி நிலவியது.
இந்த நிலையில் பிரதமா் நரேந்திர மோடி அரசு மீது நம்பிக்கை இல்லை என்று தீர்மானம் கொண்டுவர காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் முடிவு செய்தன. இதனை அடுத்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும் அசாம் மாநிலத்தில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப் பட்டவருமான கவுரவ் கோகாய் மக்களவை அலுவலகத்தில் தீர்மானத்தை கொடுத்தார்.
இதே வேளையில் பி.ஆர்.எஸ். கட்சி சார்பிலும் நம்பிக்கை இல்லாத தீர்மானம் தரப்பட்டது. தீர்மானத்தை சபாநாயகர் ஏற்பது என்றால் ஐம்பது உறுப்பினர்கள் ஆதரவு தேவை. எனவே அந்தக் கட்சி தீர்மானம் ஏற்கப்படவில்லை. காங்கிரஸ் உறுப்பினர் கோகாய் கொடுத்து உள்ள தீர்மானத்தை ஏற்பதாக சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்து உள்ளார். தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெறும் நாள் விரைவில் முடிவு செய்யப்பட இருக்கிறது.
பொதுவாக ஒரு அரசு மீது நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வரப்பட்டால் அதன் மீது அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் பேசுவார்கள். முடிவில பிரதமர் பதிலளித்து தனது அரசு மீது நம்பிக்கை உள்ளதா என்று கேட்பார். உறுப்பினர்களிடம் வாக்கெடுப்பு நடைபெறும்.
மக்களவையில் பாரதீய ஜனதா கட்சிக்கு மட்டுமே 330 உறுப்பினர்கள் உள்ளனர். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு 150- க்கும் குறைவான உறுப்பினர்கள் தான் இருக்கின்றனர். இதனால் எதிர்கட்சிகளின் தீர்மானம் தோற்றுவிடும் என்பது உண்மைதான்.
ஆனால் மணிப்பூர் கலவரம் குறித்த விவாத்திற்கு பிரதமர் பதிலளிக்க மாட்டார் என்று ஆளும் கட்சி கூறி வந்த நிலையில் அவரை பேச வைப்பதற்காக எதிர்க்கட்சிகள் இந்த யுக்தியை கையாண்டு உள்ளன. இதனால் பிரதமர் பதிலளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு இருக்கிறது.
000