நாடாளுமன்ற தேர்தலில் போட்டியா? – கோவையில் கமலஹாசன் பேட்டி

ஏப்ரல்.29

கோவை – அவிநாசி சாலை சின்னியம்பாளையம் பகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நாடாளுமன்ற தேர்தல் குறித்து கோவை, சேலம் மண்டல பொறுப்பாளர்கள் உடனான ஆலோசனைக கூட்டம் நடைபெற்றது. பின்னர் பேசிய கமல்ஹாசன், நாடாளுமன்ற தேர்தலில் கோவையில் போட்டியிடுவது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.

மக்கள் நீதி மையம் கட்சி தொடங்கப்பட்ட பின்பு கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டது. இதையடுத்து 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி, ஐ.ஜே.கே உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இந்த தேர்தல்களில் 2.5 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தது. குறிப்பாக, கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல்ஹாசன், திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமாரை பின்னுக்கு தள்ளி 51,481 வாக்குகளை பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட வானதி சீனிவாசன் 53,209 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். சுமார் 2,000 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் கோவை தெற்கு தொகுதியில் வெற்றியை தவறவிட்டார். இந்நிலையில் சமீப காலமாக திமுக, காங்கிரஸ் கட்சிகளுடன் கமல்ஹாசன் நெருக்கம் காட்டி வருகின்றார். மேலும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி நடத்திய இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் கமல்ஹாசன் கலந்து கொண்டார். கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவாக கமலஹாசன் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

காங்கிரஸ் கட்சியுடனும், திமுகவுடனும் நெருக்கம் காட்டி வரும் கமல்ஹாசன், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிடவிருப்பதாக தகவல்கள் வெளியாயின. கோவை – அவிநாசி சாலை சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள பிருந்தாவன் திருமண மண்டபத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் தலைமையில் கோவை மற்றும் சேலம் மண்டல பொறுப்பாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான முன்னேற்பாட்டு பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கமலஹாசன் பேசியதாவது, நாடாளுமன்றத் தேர்தலில் கோவையில் போட்டியிடுவது குறித்த கேள்விக்கு, இது குறித்து முடிவெடுக்க இங்கு கூட்டம் கூடி இருக்கின்றோம், இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. விரைவில் முடிவு எடுக்கப்படும் என்றார். இது நாங்கள் பேசுவதற்கான கூட்டம், என்ன பேசி இருக்கிறோம் என்பது ரகசியம். சட்டமன்றத்தில் தவறவிட்டதை நாடாளுமன்றத்தில் பெற திட்டமா என கேள்வி எழுப்பியதற்கு, இருக்கலாம் அது நல்ல எண்ணம் தானே என பதிலளித்தார்.

இதனிடையே, அண்ணாமலை கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டால், திமுக கூட்டணியில் கமல்ஹாசனை இணைத்து அண்ணாமலைக்கு எதிராக களம் இறக்கவும் திமுக கூட்டணி சார்பில் வியூகங்கள் வகுக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது. அடுத்தடுத்த இந்த பரபரப்புகளால் நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலிலும் கோவை தொகுதி அனைவராலும் கவனிக்கப்படும் முக்கிய தொகுதியாக உருவெடுத்துள்ளது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *