இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு இன்று நடைபெறுகிறது.
இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு இன்று நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு நாடு முழுவதும் 18 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். குறிப்பாக நாடு முழுவதும் 18 லட்சத்து 72 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு முடித்த மாணவ மாணவிகளும் நீட் தேர்வு எதிர்கொள்ள தயாராகியுள்ளனர். மதியம் 2 மணி முதல் 5:20 மணி வரை நீட் தேர்வு நடைபெற உள்ளது. நீட் தேர்வானது ஆங்கிலம், இந்தி, தமிழ் ,தெலுங்கு மற்றும் உருது உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்பட உள்ளது. நாடு முழுவதும் 499 நகரங்களில் இது நடத்தப்பட உள்ளது.
தேர்வு நடப்பதை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கு கடந்த 3-ந்தேதி முதல் நுழைவுச் சீட்டு வழங்கப்பட்டது. அந்த நுழைவு சீட்டில் மாணவ, மாணவிகள் எந்த நகரத்தில் எந்த தேர்வு மையத்தில் தேர்வு எழுத வேண்டும் என்பது குறிப்பிடப்பட்டுளள்து. இது தொடர்பான முன்னறிவிப்பு அனைத்து மாணவ மாணவியருக்கும் இணையதளம் மூலம் தேசிய தேர்வு முகமை அறிவித்து இருந்தது. வழக்கம் போல இந்த தேர்வில் கடுமையான கெடுபிடிகள், பரிசோதனைகள் கடைபிடிக்கப்படும். மேலும், தேர்வு எழுத உள்ள மாணவ மாணவிகள் முன்னதாக ஒரு மணி நேரத்துக்கு முன் தேர்வு மையங்களுக்கு வர வேண்டும். தமிழகத்தில் சுமார் 1.50 லட்சம் பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். இவர்களில் அரசு பள்ளி மாணவர்கள் 14 ஆயிரம் பேர்.