நான்கு முதலமைச்சர்களோடு பணியாற்றிய எம்.எஸ்.வி.

காலத்தால் அழியாத பாடல்களை தந்த மெல்லிசைமன்னர் விஸ்வநாதனின் 95 வது பிறந்தநாள், இன்று.

கேரள மாநிலம் பாலக்காடு அருகேயுள்ள எலப்புள்ளி கிராமத்தில் 1928 ஆம் ஆண்டு இதே நாளில் ( ஜுன் 24 ) பிறந்த, எம்.எஸ்.விசுவநாதன், தனது 4 வயதிலேயே தந்தையை இழந்தவர்.

தாத்தா கிருஷ்ணன் நாயர்,கண்ணனூர் சிறையில் வார்டனாக இருந்ததால், எம்.எஸ்.வி.குடும்பம் கண்ணனூருக்கு குடிபெயர்ந்தது.

அங்கு நீலகண்ட பாகவதரிடம் கர்நாடக இசையை கற்ற எம்.எஸ்.வி. 13வயதிலேயே மேடைக்கச்சேரி செய்தார்.

சென்னைக்கு வந்த அவர் ,அப்போது சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக இருந்த சி.ஆர்.சுப்புராமனிடம் உதவியாளராக சேர்ந்து, ஆர்மோனியம் வாசித்தார். வயலின்ஸ்டாக இருந்தவர், டி.கே.ராமமூர்த்தி.

சுப்புராமன், திடீரென மரணம் அடைந்ததால், அவர்  விட்டுச்சென்ற தேவதாஸ், சண்டிராணி, மணமகள் ஆகிய படங்களுக்கு விஸ்வநாதனும்,ராமமூர்த்தியும் இணைந்து பின்னணி இசை கோர்த்தனர்.

அந்தக்கால கட்டத்தில் ஷங்கர்- ஜெய்கிஷன் எனும் இரட்டை இசையமைப்பாளர்கள், இந்தியில் கோலோச்சி கொண்டிருந்தனர்.அப்போது விசுவநாதனுக்கு தோன்றிய யோசனையை ராமமூர்த்தியிடம் சொன்னார்.

’சங்கர்- ஜெய்கிஷன் போல் நாமும் இணைந்து இசை அமைக்கலாமே?’என அவர் சொன்ன யோசனையை ராமமூர்த்தி ஏற்றுக்கொண்டார்.

பணம் என்ற படத்தில் முதன் முதலாய் இருவரும் சேர்ந்து இசை அமைத்தனர். 1952 ஆம் ஆண்டு முதல் 65 வரை இந்த இரட்டையர் கூட்டணி 100 படங்களுக்கு இசை அமைத்தது.இருவரும் சேர்ந்து இசை அமைத்த கடைசி படம் ‘ஆயிரத்தில் ஒருவன்’.

பின்னர் இருவரும் பிரிந்து தனி ஆவர்த்தனம் செய்தனர். எம்.எஸ்.வி. அளவுக்கு ராமமூர்த்தி சோபிக்கவில்லை .1995 ஆம் ஆண்டு வெளியான எங்கிருந்தோ வந்தான் படத்தில் இருவரும் சேர்ந்தனர்.படம் தோல்வி அடைந்ததால், இரட்டையர் கூட்டணி தொடர முடியவில்லை.

ராம.நாராயணன், தான் டைரக்டு செய்த ஒரு படத்துக்கு ‘விஸ்வநாதன் -ராமமூர்த்தி என பெயரிட்டு இரட்டை இசை அமைப்பாளர்களுக்கு கவுரவம் அளித்தார்.

ஜீன்ஸ் படத்தில் இரட்டையர்கள் பிரசாந்துக்கு விசுவநாதன் -ராமமூர்த்தி என பெயர் சூட்டி இருந்தார், இயக்குநர் ஷங்கர்.

கலைஞர் கருணாநிதி, எம்.ஜி.ஆர், என்.டி.ராமராவ், ஜெயலலிதா ஆகிய நான்கு முதலைமைச்சர்கள் படங்களின் பணியாற்றியவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர், எம்.எஸ்.வி.

உலகம் சுற்றும் வாலிபன் படத்துக்கு முதலில் இசைஅமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டவர் குன்னக்குடி வைத்தியநாதன்.அந்த பாடல்கள் எம்.ஜி.ஆருக்கு திருப்தி அளிக்கவில்லை.

எனவே எம்.எஸ்.வி.யை அணுகினார் எம்.ஜி.ஆர். அந்த படத்துக்காக எம்.எஸ்.வி.போட்டுக்கொடுத்த 108 டியூன்களில் இருந்து படத்துக்குதேவையானபாடல்களை  தேர்வு செய்தார், எம்.ஜி.ஆர். மனதுக்கு நெருக்கமான, இதமான பாடல்களை எம்.எஸ்.வி.யுடன்  இணைந்து அளித்த கண்ணதாசனுக்கும் இன்று பிறந்தநாள் என்பது. தெய்வீகச்செயல் என்றே சொல்ல வேண்டும்.

000

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *