ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்து முடித்துள்ளார் ரஜினிகாந்த்.
அவரது மகள் ஐஸ்வர்யா டைரக்ட் செய்யும் லால்சலாம் மற்றும் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜெயிலர்’ஆகிய படங்களே அவை.
ஜெயிலரில் தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
அனிருத் இசையமைக்கிறார். பான் இந்தியா முறையில் உருவாகும் இந்தப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
ஆகஸ்ட் 10-ம் தேதி ஜெயிலர் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘காவலா’ பாடல் கடந்த 6-ம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்தப் பாடலுக்கு தமன்னா நடனமாடியிருந்தார். அருண்ராஜா காமாராஜா பாடலை எழுதியிருந்தார்.ஷில்பா ராவ், அனிருத் இணைந்து பாடியிருந்தனர்.
படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் நாளை (17 ஆம் தேதி) வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
அந்த வீடியோவில் ரஜினி, ‘‘ஹேய்.. இங்க நான் தான் கிங்கு.. நான் வைச்சது தான் ரூல்ஸ். அத என் இஷ்டத்துக்கு மாத்திக்கிட்டே இருப்பேன். அத கப்சிப்னு கேட்டு ஃபாலோ பண்ணணும். அத விட்டுட்டு அடாவடித்தனம் பண்ணா கண்டதுண்டமா வெட்டி கலைச்சு போட்ருவேன்” என கர்ஜிக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. டயலாக் பேசிக்கொண்டே ரஜினி மாஸாக நடந்து வரும் காட்சிகளும் காட்டப்படுகின்றன.
இந்த ப்ரோமா இரண்டாவது சிங்கிள் பாடலுக்கான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
000