கடலூர் மாவட்டம், விருத்தாசலம் பகுதியில் தனியார் பள்ளியொன்றில் 5 வயது சிறுமி ஒருவர், அந்தப் பள்ளியின் தாளாளரும், தி.மு.க நகர்மன்ற உறுப்பினருமான பக்கிரிசாமி என்பவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவம் பேசுபொருளாகியிருக்கிறது.
முன்னதாக, பாதிக்கப்பட்ட சிறுமி நேற்று வயிற்றுவலி எனப் பெற்றோர்களிடம் கூறியதையடுத்து, சிறுமியைப் பெற்றோர் மருத்துவமனைக்குக் கொண்டுசென்றிருக்கின்றனர். அப்போது, சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கின்றனர். இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இந்த விவகாரம் தொடர்பாகச் சட்டமன்றத்தில் இன்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். அதன்மீது விளக்கமளித்த முதல்வர் ஸ்டாலின், இந்த விவகாரத்தில் பள்ளியின் தாளாளர் பக்கிரிசாமி என்பவர்மீது உடனடியாக வழக்கு பதிவுசெய்யப்பட்டு அவர் கைதுசெய்யப்பட்டதாகவும், அவர் தி.மு.க நகர் மன்ற உறுப்பினர் என்று தெரியவந்த பிறகு கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இப்படியிருக்க, சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி பேசுவதை நேரலையில் ஒளிபரப்ப மறுத்ததைக் கண்டித்து, அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “தி.மு.க ஆட்சிக்கு வந்ததிலிருந்து ஆங்காங்கே பாலியல் வன்கொடுமை தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. நேற்று இரவு சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் செய்தும்கூட காலை 9 மணி வரை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படவில்லை. இரவு 8 மணி முதல் காலை 9 மணி வரை கிட்டத்தட்ட 13 மணி நேரம் இந்தக் குற்றவாளியைக் கைதுசெய்யவில்லை.
அதற்குக் காரணம் அவர் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர், நகர் மன்ற உறுப்பினராக இருக்கிறார். ஆனால் முதலமைச்சர், தகவல் கிடைத்தவுடனே கைதுசெய்யப்பட்டதுபோல சட்டமன்றத்தில் பேசியிருக்கிறார். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அந்தப் பள்ளியின் உரிமையாளர் குழந்தையைப் பாலியல் தொல்லைக்கு உட்படுத்தியிருக்கிறார். உளவுத்துறை மூலமாக நிச்சயமாக அவருக்குத் தகவல் கிடைத்திருக்கும். அப்படி இல்லையென்றால் இது ஒரு திறமையற்ற அரசாங்கம் என்பது நிரூபணமாகிறது.
அதோடு இந்தக் குழந்தைக்கு ஏற்பட்ட இந்தக் கொடுமையான செயலை சட்டமன்றத்தின் ஜீரோ ஹவரில் நான் எழுப்பினேன். நான் பேச எழுந்தவுடனே அதை நேரலையிலிருந்து (Live) கட் செய்துவிட்டார்கள். அதற்கு முந்தைய செய்தியையும் காட்டுகிறார்கள். நான் பேசி முடித்து அமர்ந்த பிறகு அதற்குப் பிந்தைய செய்தியையும் காட்டுகிறார்கள். அதன் பிறகு சிறப்புத் தீர்மானம் வருகிறது, முதலமைச்சர் பதில் வருகிறது. ஆனால் நான் பேசிய பேச்சுகள் நேரலையில் வரக் கூடாது என்பதற்காக நிராகரித்திருக்கிறார்கள். சபாநாயகர், ஆளுங்கட்சி சிக்னல் கொடுத்தால்தான் பேசுகிறார். தேர்தல் அறிக்கையில், தி.மு.க ஆட்சிக்கு வந்தால் சட்டப்பேரவையில் நடைபெறுகிற நிகழ்வுகள் நேரடியாக ஒளிபரப்பப்படும் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.
தேர்தல் அறிக்கையில் 85 சதவிகிதம் நிறைவேற்றப்பட்டதாகச் சொல்கிறார்கள், இதையும் நிறைவேற்றுங்கள். முதலமைச்சர் பேசுவதைக் காட்டுகிறார்கள், அமைச்சர்கள் பேசுவதைக் காட்டுகிறார்கள், எதிர்க்கட்சி பேசுகிறபோது மட்டும் இருட்டடிப்பு செய்துவிடுகிறார்கள். எதிர்க்கட்சி பேசுகிறபோது நேரலையில் வந்தால்தான் கேள்வி என்ன கேட்டார்கள், பதில் என்ன சொன்னார்கள் என்று மக்கள் புரிந்துகொள்ள முடியும். வெறும் பதிலை மட்டும் காட்டி என்ன பிரயோஜனம்… பிறகு எங்கு சட்டமன்றம் ஜனநாயகப்படி நடக்கிறது… சபை நடுநிலையாகச் செயல்படவில்லை” என்று கூறினார்.