கேரளா மாநிலம் வயநாட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, எம்.பி. பதவி, வீடு, அடையாளம் ஆகியவற்றை வேண்டுமானால் பாஜக எடுத்துக்கொள்ளலாம், சிறையில் அடைக்கலாம் ஆனால் நான் பேசுவதை யாராலும் தடுக்க முடியாது என்று தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திரமோடியின் பெயர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு அண்மையில் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதனை தொடர்ந்து, ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
இந்த நிலையில், எம்.பி பதவி பறிக்கப்பட்ட பிறகு, முதல் முறையாக ராகுல் காந்தி, கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு தொகுதிக்குச் சென்றார். தனது சகோதரி பிரியங்கா காந்தியுடன் திறந்த வாகனத்தில் நின்றபடி ராகுல்காந்தி பேரணியில் பங்கேற்றார். அப்போது, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்திக்கு, காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனை தொடர்ந்து, வயநாட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்றுப் பேசினார். அதில், எம்.பி என்பது வெறும் பதவி மட்டும் தான். இந்த பதவி, வீடு, அடையாளம் ஆகியவற்றை வேண்டுமானால் பாஜக எடுத்துக் கொள்ளலாம். என்னை சிறையிலும் அடைக்கலாம். ஆனால், வயநாடு மக்களை பிரதிநிதித்துவம் செய்வதை யாராலும் தடுக்க முடியாது. நான் பேசுவதையும் யாராலும் தடுக்க முடியாது” என்று கூறினார்.