June 20, 23
அமலாக்கத்துறையின் மேல்முறையீட்டு மனு நாளை ( புதன் கிழமை) விசாரணைக்கு வரவுள்ள நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகார்களின் பேரில் அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை கடந்த வாரம் கைது செய்தது. நீதிமன்றக் காவலில் உள்ள அவருக்கு காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெறவும் நீதிமன்றம் அனுமதி கொடுத்தது. அங்கு செந்தில் பாலாஜிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது பற்றி அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்துள்ள பேட்டியில் ” காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நாளை அறுவை நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
இதனால் அவரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதில் இழுபறி நீடித்து வருகிறது.
இருப்பினும் அமலாக்க துறை அதிகாரிகள், தங்கள் விசாரணைக்கு ஏற்றவாறு அவருடைய உடல்நிலை எப்படி இருக்கிறது என்று காவேரி மருத்துவமனை மருத்துவர்களிடம் இருந்து விவரங்களை சேகரித்துள்ளனர். அந்த விவரங்களின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்க உத்தேசிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் செந்தில் பாலாஜி விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் திங்கள் கிழமை மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில் செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவரை மீண்டும் ஓமந்தூரார் மருத்துவ மனைக்கு மாற்ற உத்தரவிடுமாறும் கேட்டுக்கொள்ளளப்பட்டு இருக்கிறது.
இதற்குப் போட்டியாக செந்தில் பாலாஜியின் மனைவி உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் அலாக்கத்துறை மனு விசாரணையின் போது தனது தரப்பு வாதங்களையும் கேட்க வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறார்.
000