பல ஆயிரம் ஏக்கர் நிலத்தை அபகரிக்க நித்தியானந்தா முயற்சி.
——
அமைச்சர் சஸ்பெண்ட், சீடர்கள் 22 பேர் கைது.
அதிரவைக்கும் தகவல்.
———
கைலாசா என்ற தனி நாட்டை ஏற்படுத்தி அதில் குடியிருப்பதாக சொல்லிக் கொண்டிருக்கும் நித்தியானந்தா, பொலிவியா என்ற நாட்டில் பழங்குடி மக்களை ஏமாற்றி பல ஆயிரம் ஏக்கர் நிலத்தை கைப்பற்றிய விவகாரத்தில் 22 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அமைச்சர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கிறார்
பெங்களூர் அருகே பிடதி என்ற இடத்தில் ஆசிரம ம் அமைத்து அருள் பாலித்தவர் நித்தியானந்தா.
இவர் கடந்த 2010- ஆம் ஆண்டு நடிகை ஒருவருடன் படுக்கையில் இருக்கும் வீடீயோ வெளியானது. அதன் தொடர்ச்சியாக இவர் மீது கர்நாடக மாநிலத்தில் பல வழக்குகள் பதிவானது. இவருடைய ஆசிரமத்தின் மீதான மதிப்புக் குறைந்தது. வழக்குகள் குவிந்தன.
திடீரென ஒரு நாள் நித்தியானந்தா வழக்குகளை எதிர்கொள்ளாமல் இந்தியாவை விட்டு தப்பிச் சென்றார்.
நித்தியானந்தா எங்கு இருக்கிறார் என்பதே சில மாதங்கள் மர்மமாக இருந்தது. பின்னர் கைலாசா என்ற நாட்டை தான் ஏற்படுத்தி உள்ளதாகவும் இங்கு குடியேற விரும்புகிறவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் செய்திகளை பரப்பினார்.
கைலாசா நாட்டை ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினராக சேர்ப்பதற்கு நித்தியானந்தா சீடர்கள் எடுத்த முயற்சிகள் நிறைவேறவில்லை.
வழக்கு ஒன்று சில மாதங்கள் முன்பு விசாரணைக்கு வந்த போது சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர் அவருடைய பதிலில் நித்தியானந்தா தென் அமெரிக்கா கண்டத்தில் உள்ள ஈக்வாடார் நாட்டில் தங்கியிருப்பதாக தெரிவித்தார்.
இந்த நிலையில் ஈக்வாடார் அருகில் உள்ள பொலிவியா என்ற நாட்டில் பல ஆயிரம் ஏக்கர் நிலம் பழங்குடி மக்களுக்குச் சொந்தமாக இருப்பது நித்தியானந்தாவுக்கு தெரியவந்தது.
உடனே பொலிவியா நாட்டு பழங்குடி நலத்துறை அமைச்சர், அதிகாரிகள் மற்றும் பழங்குடி மக்களின் தலைவர்களுக்கு பல கோடி டாலர்களை லஞ்சமாக கொடுத்து அதில் சுமார் ஆயிரம் ஏக்கரை ஆயிரம் ஆண்டுகள் பயன்படுத்திக் கொள்வதற்கு ஒப்பந்தம் போட்டு இருக்கிறார் நித்தியானந்தா.
வெளிநாடு ஒன்றில் இருந்து தப்பிவந்தவர், பழங்குடி மக்களின் நிலத்தை கைப்பற்ற ஒப்பந்தம் போட்டது பொலிவியா நாட்டில் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிர்ச்சிக்கு ஆளான பொலிவியா ஜனாதிபதி லூயீஸ் ஆர்ஸ், உடனடியாக பழங்குடி நலத்துறை அமைச்சரை நீக்கிவிட்டார். அதிகாரிகள் சிலரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
நித்தியானந்தா உடன் போடப்பட்டிருந்த ஒப்பந்தத்தையும் ஜனாதிபதி ரத்து செய்துவிட்டார். விரிவாக விசாரணை நடத்தி சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு பிறப்பித்து இருக்கிறார்.
மோசடியாக நிலத்தை அபகரிக்க முயன்ற வழக்கில் நித்தியானந்தாவின் சீடர்கள் 22 பேர் இதுவரை கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்களில் மூன்று பேர் இந்தியர்கள்.
கொடுத்தப் பணத்தையும் இழந்ததோடு சீடர்களையும் சிறைக்கு அனுப்பிவிட்ட நித்தியானந்தா, விசாரணையை சந்திக்கும் நிலைக்கு ஆளாகி உள்ளார்.
தீயவர்கள் எங்கு சென்றாலும் தீதே நடக்கும் என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது.