ஆகஸ்டு,23-
சந்திராயன் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவில் வெற்றி கரமாக தரையிறங்கி உள்ளது. இதன் மூலம் நிலவின் தென்பகுதியில் கால் பதித்த முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்று இருக்கிறது.
நிலவின் தென் திசையை ஆய்வு செய்வதற்காக கடந்த மாதம் 14-ம் தேதி சென்னை அடுத்த ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட்ட சந்திரயான் -3 விண்கலம் பூமியின் சுற்றுவட்டப்பாதையை கடந்து, நிலவின் சுற்றுவட்ட பாதையில் வலம் வந்துக் கொண்டிருந்தது. இந்த விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் என்ற ஆய்வுக் கலம் கடந்த 17-ம் தேதி வெற்றிகரமாகப் பிரிக்கப்பட்டது.
இதன் பிறகு நிலவுக்கு வெகு அருகில் சுற்றும் படி இயக்கப்பட்டு வந்த லேண்டரின் வேகமும் படிப்படியாக குறைக்கப்பட்டது. இதையடுத்து லேண்டர் நிலவின் மேற்பரப்பை படம் எடுத்து அனுப்பியது. அந்தப் படங்களின் அடிப்படையில் நிலவில் லேண்டர் இறங்க வேண்டிய இடத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் முடிவு செய்தனர்
அதன் படி லேண்டரின் வேகத்தை படிப்படியாக குறைத்து இன்று மாலை 6.04 மணிக்கு சரியாக தரையிறக்கினார்கள். பெங்களுரில் உள்ள இஸ்ரோவின் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்தபடி இந்தப் பணிகளை விஞ்ஞானிகள் ஒருங்கிணைத்தனர்.
இ்ஸ்ரோ முதன் முதலில் இயக்கிய சந்திராயன்-1 நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. அதன் பிறகு கடந்த 2019-ஆம் ஆண்டில் அனுப்பப்பட்ட சந்திராயன் – 2 கடைசி நேரத்தில் கட்டுப்பாட்டை இழந்ததால் நிலவிலேயே விழுந்து நொறுங்கி விட்டது. இதனால் அதை விட மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பம் மூலம் சந்திரயான் – 3 விண்கலத்தை உருவாக்கி அனுப்பி இருந்தது இ்ஸ்ரோ.
மேலும் அமெரிக்கா போன்ற நாடுகள் நிலவின் வடக்குப் பகுதியில் தான் தங்கள் விண்கலத்தை இறக்கி ஆய்வு செய்து உள்ளன. தெற்குப் பகுதிக்கு ரஷ்யா அனுப்பிய லூனா 25 என்ற விண்கலமும் இரண்டு தினங்கள் முன்பு கட்டுப்பாட்டை இழந்துவிட்டது. அதனால் இந்தியாவின் விக்ரம் லேண்டர்தான் நிலவின் தெற்குப் பகுதியில் இறக்கப்பட்ட முதல் விண்கலம் என்ற பெருமையை பெற்று உள்ளது.
விக்ரம் லேண்டர் நிலவில் இறங்கும் காட்சியை நேரலையில் பொதுமக்கள் பார்ப்பதற்கு இஸ்ரோ ஏற்பாடு செய்திருந்தது. இதனால் நாடு முழுவதும் பல கோடி மக்கள் இந்த விஞ்ஞான சாதனையை கண்டு வியந்தனர்.
தென்னாப்பிரிக்கா சென்று உள்ள பிரதமர் மோடி அங்கிருந்து சந்திராயன் 3 நிலவில் இறங்குவதை பார்த்து விட்டு இந்திய விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.
அவர் தமது உரையில் நிலவுக்கு மனிதனை அனுப்புவதே இந்தியாவின் அடுத்த இலக்கு என்று தெரிவித்து உள்ளார்.
000