” நீதிக்கான போராட்டத்தில் இருந்து பின்வாங்க மாட்டோம் “ – சாக்‌ஷி மாலிக் விளக்கம்

June 05, 23

” நீதிக்கான போராட்டத்தில் இருந்து நாங்கள் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம் “ என சாக்‌ஷி மாலிக் விளக்கம் அளித்துள்ளார். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்த நிலையில், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி முன்னணி மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்ஷி மாலிக், சங்கீதா போகத் மற்றும் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா உள்ளிட்டோர் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனையடுத்து, கடந்த 27 ஆம் தேதி அன்று புதிய நாடாளுமன்ற திறப்பு விழா நடைபெற்ற நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டடம் நோக்கி இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்ஷி மாலிக், சங்கீதா போகத் மற்றும் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா உள்ளிட்டோர் தலைமையில், ஜன்தர் மந்தர் பகுதியில் இருந்து நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தினர். போலீசாரின் தடுப்புகளை தாண்டி பேரணியை தொடர முயன்ற போது, இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட, வீரர், வீராங்கனைகளை போலீசார் கைது செய்து தங்கள் வாகனத்தில் ஏற்றிச் செற்றனர். இதனால் அந்த பகுதி முழுவதும் மிகவும் பரபரப்பாக காணப்பட்டது.

மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் இந்த கைது நடவடிக்கைக்கு, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்திருந்தனர். இதனை தொடர்ந்து, புதிய நாடாளுமன்ற கட்டடம் நோக்கி பேரணி செல்ல முற்பட்ட விவகாரத்தில், போராட்டத்தை முன்னெடுத்து சென்ற முன்னணி மல்யுத்த வீரர்களான பஜ்ரங் புனியா , சாக்ஷி மாலிக் , வினேஷ் போகட் மற்றும் போராட்டத்தின் மற்ற அமைப்பாளர்கள் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதற்கு சாக்ஷி மாலிக் , வினேஷ் போகட் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

நாட்டிற்காக பல்வேறு சர்வதேச போட்டிகளில் வென்ற பதக்கங்களை கங்கையில் வீசப்போவதாக, சாக்சி மாலிக் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷண் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் பதக்கங்களை கங்கை நதியில் வீசிவிடுவோம். எங்கள் கழுத்துக்களை அலங்கரிக்கும் பதக்கங்களுக்கு இனிமேலும் எந்த அர்த்தமும் இல்லை என நினைக்கிறேன். சுயமரியாதையை இழந்துவிட்டு வாழ்வதில் என்ன பயன் உள்ளது என அந்த அறிக்கையில் அவர் தெரிவித்திருந்தார்.

கடந்த மே மாதம் 30ம் தேதி சாக்‌ஷி மாலிக் தனது சக மல்யுத்த வீரர் வீராங்கனைகளோடு பதங்கங்களை சுமந்து கொண்டு கங்கை நதிக் கரை அருகே சென்றார். நதியின் அருகே சென்றவுடன் மனம் தாங்காமல் உடந்து அழத் தொடங்கினார். மல்யுத்த வீராங்கனைகள் பதங்கங்களை கங்கையில் வீச சென்ற நிகழ்வுகள் தேசத்தையே உலுக்கியது. அதன் பின்னர் விவசாய சங்க தலைவர்கள் மல்யுத்த வீராங்கனைகளை சந்தித்து சமாதானம் செய்து அவர்களை அங்கிருந்து அழைத்து சென்றனர்.

இன்று பிற்பகல் மல்யுத்த வீரர்களின் போராட்டத்தில் இருந்து விலகுவதாகவும் , கிழக்கு ரயில்வே பணியில் மீண்டும் சேர உள்ளதாகவும் சாக்‌ஷி மாலிக் தெரிவித்ததாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் அந்த தகவல் தவறானது எனவும் நீதிக்கான போராட்டத்தில் இருந்து நாங்கள் யாரும் பின்வாங்கப் போவதில்லை, பின்வாங்கவும் மாட்டோம் எனவும் சாக்‌ஷி மாலிக் தெரிவித்துள்ளார்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *