மே.25
கேரள நீதிமன்றங்களில் சுடிதார் அணி அனுமதிக்குமாறு உயர்நீதிமன்றப் பதிவாளரிடம் பெண் நீதிபதிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் முறையிட்டுளளனர்.
கடந்த 1970ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி நீதிபதிகளின் ஆடை விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன்படி, ஆண் நீதிபதிகள் கருப்பு நிற ஓபன் காலர் கோட், வெண்ணிற சட்டை, வெண்ணிற கழுத்துப் பட்டையுடன் கருப்பு நிற மேலங்கி அணிய வேண்டும். அதேபோல, பெண் நீதிபதிகள் மிதமான நிறத்திலான பிராந்திய ஆடை, மேலங்கி மற்றும் வெண்ணிற கழுத்துப் பட்டை அணிய வேண்டும்.
53 ஆண்டுகளாக பின்பற்றப்படும் இந்த ஆடை விதிகளில் மாற்றம் கொண்டுவரகோரி கேரளாவில் 100க்கும் மேற்பட்ட பெண் நீதிபதிகள் அம்மாநில உயர் நீதிமன்ற பதிவாளரை சந்தித்தனர். இந்த ஆடை முறையால் ஏற்படும் அசவுகரியங்களை பெண் நீதிபதிகள் அப்போது எடுத்துரைத்தனர். குறிப்பாக கோடை காலங்களில் நெரிசல் மிகுந்த கோர்ட்டுகளில் இவ்வாறு இறுக்கமாக ஆடைகளுடன் பல மணிநேரம் அமர்வது சிரமமாக இருப்பதாகவும், மின் தடை நேரத்தில் வியர்த்து வழிவதாகவும் பதிவாளரிடம் தங்களின் மனக்குறையை கூறினர்.
மேலும், தெலங்கானா உயர் நீதிமன்றம் கடந்த 2021 மார்ச் 15ஆம் தேதி வெளியிட்ட சுற்றறிக்கையும் அப்போது அவர்கள் உதாரணம் காட்டினர். அந்த சுற்றறிக்கையில், பெண் நீதிபதிகள் பணியின்போது சேலை மட்டுமல்லாது, சல்வார், சுடிதார், நீளமான பாவாடை, பேண்ட் போன்றவை அணியலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, தெலங்கானாவை போலவே கேரள மாநிலத்திலும் சுடிதார் அணிய அனுமதி வேண்டும் என அம்மாநில நீதிபதிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.