தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் மீது தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் குற்றம்சாட்டியுள்ளது.
அனுமதி வழங்கப்பட்டபோதும் ஆலையில் தேங்கியுள்ள ஜிப்சம் கழிவுகளை தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் நீக்கவில்லை என தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் குற்றம்சாட்டியுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் தேங்கியுள்ள கழிவுகளை நீக்க அனுமதிக்கக் கோரி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்திர சூட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆலையில் ஜிப்சம் உள்ளிட்ட கழிவுகள் நீக்கப்படாமல் உள்ளதாகவும், அவை நீக்கப்படாவிட்டால் உபகரணங்கள் பாதிப்படையும் என நிபுணர் குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக வேதாந்தா நிறுவனம் வாதிட்டது.
அப்போது தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சி.எஸ்.வைத்திய நாதன், “ஸ்டெர்லைட் ஆலையில் தேங்கியுள்ள ஜிப்சம் கழிவுகளை அகற்ற 5 ஆண்டுகளுக்கு முன்பே நீதிமன்றம் உத்தரவிட்டும் இன்னும் அகற்றவில்லை” என்றார்.
இதையடுத்து ஏற்கனவே வழங்கப்பட்ட அனுமதியின் அடிப்படையில் கழிவுகளை மட்டும் நீக்க வேதாந்த நிறுவனத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் அரசு அனுமதிக்காத எந்த பணிகளையும் மேற்கொள்ள அனுமதிக்க இயலாது என திட்டவட்டமாக தெரிவித்து விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர். மேலும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரியும், இயந்திரங்களை செப்பனிடக் கோரியும் முன்வைத்த கோரிக்கை தொடர்பான பிரச்னைகளை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுக்கவில்லை.