நெய்வேலியில் பாமக போராட்டம், கண்ணீர் புகை குண்டுகள் வீச்சு, துப்பாக்கிச் சூடு. பெரும் பதற்றம்.

ஜுலை,28-

நெய்வேலியில் என்எல்சி நிறுவனத்திற்கு எதிராக நடந்த பேராட்டத்தில் அன்புமணி ராமதாஸ் உப்பட சுமார்  500 பேர் கைது செய்யப்பட்டனர். இதனைக் கண்டித்து அங்கு மூண்ட கலவரத்தைக் கட்டுப்படுத்த போலிசார் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள்.

என்எல்சி நிறுனம் இரண்டாவது சுரங்க விரிவாக்கத்திற்காக கடலூர் மாவட்டத்தில் சேத்தியாதோப்பு அருகே சுமார் 10 கிராமங்களில் நிலம் எடுக்கு பணியை புதன்கிழமை அன்று தொடங்கியது. உரிய இழப்பீடு வழங்காமல் நிலம் எடுக்கப்படுவதகாக் கூறி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனை அடுத்து என்எல்சி நிறுவனத்திற்கு எதிராக நெய்வேலியில் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர்அன்புமணி ராமதாஸ் தலைமையிக் காலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர். சென்னை-கும்பகோணம் சாலையில்  உள்ள இந்திரா நகர் என்ற இடத்தில் நடைபெற்ற போராட்டத்தை முன்னிட்டு ஏராளமான போலிசர் குவிக்கப்பட்டு இருந்தனர்.

அப்போது பேசிய அன்புமணி, “விவசாயிகள் நிலத்தை என்எல்சி நிறுவனம் சட்டவிரோதமாக கையகபடுத்துகிறது.  இதற்கு தமிழ் நாடு காவல்துறையும் துணை போகிறது. என்எல்சி நிறுவனம் எவ்வளவு பணம் கொடுத்தாலும் தேவையில்லை. நிலத்தை எடுக்காமல் இருந்தால் போதும். என்.எல்.சி.தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டும்” என்று பேசினார். தொடர்ந்து என்எல்சிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார்கள்.

இதன் பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் என்எல்சி அலுவலகத்தை நோக்கி முன்னேறினார். அப்போது தடுத்து நிறுத்தப்பட்டு அன்புமணி உள்ளிட்டோர் கைது செய்து வேனில் ஏற்றப்பட்டனர். இதற்கு எதிராக பாமக தொண்டர்கள் மறியலில் ஈடுபட்டனர். கல் வீச்சும் நடைபெற்றது. அவர்களை கலைக்க தடியடி மற்றும் கண்ணீர் புகைக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டன. தொடர்ந்து போலிசார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி கூட்டத்தை எச்சரிக்கை செய்தனர். இதனால அந்த இடமே போர்க்களம் போல மாறியது.

அன்புமணி உள்ளிட்டோர் அருகில் உள்ள திருமண மண்டபத்தி்ல் தங்க வைக்கப்பட்டனர். மாலை நான்கு மணி  அளவில் நிலமை முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுவிட்டதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

இந்த நிகழ்வைக் கண்டித்தும் அன்புமணி உள்ளிட்டோரை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும் தமிழ் நாட்டின் பல இடங்களில் பாட்டாளி மக்கள் கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர் . மாநிலம் முழுவதும் நூற்றுக்கும் அதிகமான இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று உள்ளன.

கடலூர் மாவட்டம் முழுவதும் பலத்த போலிஸ் பாதுகாப்பு  போடப்பட்டு உள்ளது. இன்று இரவும் அரசு பேருந்துகள் கிராமங்களுக்கு செல்வது சந்தேகம் என்று தெரிகிறது.

நெய்வேலியில் நடந்தவற்றுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்து உள்ளார். அவரது அறிக்கை வருமாறு..

கடலூர் மாவட்டம் வளையமாதேவி பகுதியில் என்.எல்.சி விரிவாக்கத்திற்காக நிலங்கள் கையகப்படுத்தப் படுவதைக் கண்டித்து நெய்வேலியில் நடைபெற்ற  போராட்டத்தின் நிறைவில் பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கைது செய்யப்பட்டதும், அதைத்தொடர்ந்து பா.ம.கவினர் மீது நடத்தப்பட்ட தடியடி  உள்ளிட்ட தாக்குதல்களும் கண்டிக்கத்தக்கவை. மண்ணைக் காக்க அறவழியில் நடத்தப்படும் போராட்டத்தை அடக்குமுறை மூலம் ஒடுக்க அரசும், காவல்துறையும் முயன்றால் அவர்களுக்கு தோல்வியே கிடைக்கும்.

காவிரிப் பாசனப் பகுதிகளின் அங்கமான சேத்தியாத்தோப்பு பகுதியில், நன்றாக விளைந்து கதிர்விடும் நிலையில் உள்ள நெற்பயிர்களை இராட்சத எந்திரங்களைக் கொண்டு அழித்து நிலங்களை கைப்பற்றிய என்.எல்.சி நிறுவனம் மற்றும் கடலூர் மாவட்ட நிர்வாகத்தின் அடக்குமுறையையும், அத்துமீறலையும் மனசாட்சியுள்ள எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. என்.எல்.சி நிறுவனத்தின் அத்துமீறலைக் கண்டித்து தான் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை எடுத்த முடிவின் அடிப்படையில் பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தலைமையில் நெய்வேலி என்.எல்.சி நுழைவாயிலில் அறப்போர் நடத்தப்பட்டது.

பாட்டாளி மக்கள் கட்சியின் போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட போதிலும், போராட்டம் மிகவும் கட்டுப்பாட்டுடன் நடத்தப்பட்டது. போராட்டத்தில் பேசி முடித்த பிறகு என்.எல்.சியை முற்றுகையிட அன்புமணி இராமதாஸ் தலைமையில் பா.ம.கவினர் முயன்ற போது, அதை காவல்துறை அனுமதித்திருக்க வேண்டும். ஆனால், என்.எல்.சி நிறுவனத்தின் ஏவலர்களாக மாறி மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களையும், அவருடன் சென்ற பா.ம.க.வினரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

அதனால், பதற்றம் அதிகரித்த நிலையில், பா.ம.க. தொண்டர்கள் மீது கண்மூடித்தனமாக தடியடி நடத்தியது தான் நிலைமை மோசமடைய காரணம் ஆகும். பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த ஒரு தொண்டரை பத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் சூழ்ந்து கொண்டு கண்மூடித்தனமாக தாக்கினார்கள். அவரது ஆடைகள் கிழித்தெறியப்பட்டன.

என்.எல்.சி நிறுவனத்திற்கு எதிராகவும், மண்ணையும், மக்களையும் காப்பதற்காகவும் பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய போராட்டத்தைக் கையாள்வதில் காவல்துறையினரின் அணுகுமுறையும், அத்துமீறலும் கண்டிக்கத்தக்கவை. இத்தகைய சீண்டல்களின் மூலம் பா.ம.க. போராட்டத்தை அடக்கி விட முடியாது.

பாட்டாளி மக்கள் கட்சி முன்னெடுத்திருப்பது என்.எல்.சி என்ற ஒற்றை நிறுவனத்திற்கு எதிரான போராட்டம் அல்ல. தமிழ்நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்; சுற்றுச்சூழலை காப்பாற்ற வேண்டும்; புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த வேண்டும்; இவை அனைத்திற்கும் மேலாக  கடலூர் மாவட்ட மண்ணையும், மக்களையும் காப்பாற்ற வேண்டும் என்ற உன்னத நோக்கத்திற்காக நடத்தப்படும் போராட்டம் ஆகும். இந்தப் போராட்டத்தில் இறுதி வெற்றி கிடைக்கும் வரை பா.ம.க.வின் போராட்டம் தொடரும்.

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.

000

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *