ஜுலை,27-
விளைந்து கதிர்விடும் நெற்பயிர்களை இயந்திரங்களைக் கொண்டு என்.எல்.சி.நிர்வாகம் அழிக்கும் காட்சியை பார்க்கும் கல் நெஞ்சக்காரர்கள் கூட கலங்கிப் போய்விடுவார்கள். நெய்வேலியை சுற்றி நடைபெற்று வரும் பயிர் அழிப்பு கடுமையான கண்டனத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம், நெய்வேலியில் செயல்படும் என்.எல்.சி. நிறுவனம் தனது இரண்டாவது சுரங்க விரிவாக்கத்திற்காக கரிவெட்டி, கத்தாழை, மும்முடி சோழகன், வளையமாதேவி கிராமங்களில் கடந்த 2016- ஆம் ஆண்டு விவசாய நிலங்களை கையகப்படுத்தியது. அப்போது ஏக்கருக்கு இழப்பீடாக ஆறு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த தொகை மிகவும் குறைவு,புதிய நில எடுப்புச் சட்டத்தில் கூறியுள்ளபடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று கிராம மக்கள் போராட்டங்களை நடத்தி வந்தனர். மேலும் அந்த நிலத்தில் விவசாயமும் செய்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவோடு இரவாக வளையா மாதேவி கிராமத்திற்கு பொக்லைன் எந்திரங்கள் கொண்டு வரப்பட்டன. பாதுகாப்புக்கு 500 போலிசார் குவிக்கப்பட்பட்டனர்.
இந்த இயந்திரங்கள் சாகுபடி செய்திருந்த வயல்களில் இறங்கி நெல் பயிர்களை அழித்ததுதான் உச்சம். இதை தடுக்க வந்த விவசாயிகள் யாரையும் போலிசார் அருகில் விடவில்லை. கண் எதிரே பயிர் அழிக்கப்படுவதைக் கண்ட கிராமத்துப் பெண்கள் மண்ணை வாரி தூற்றினார்கள். அந்த இடமே கண்ணீர் கோலமாக காட்சி அளித்தது/
இதனைக் கண்டித்து கடலூர் மாவட்டத்தின் பல இடங்களில் சாலை மறியலில் ஈடுப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். சிலர். டயர்களை சாலையின நடுவே போட்டு எரித்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள். கல்வீச்சில் 15 அரசு பேருந்துகளின் கண்ணாடி உடைந்து சேதம் அடைந்தது. பதற்றத்தை தவிர்க்க இரவு நேர பேருந்துப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இதற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையான கண்டனத்தை தெரிவித்து உள்ளார்.
“விவசாய நிலங்களை கையகப்படுத்தும் என்எல்சி நிறுவன முயற்சிக்கு திமுக அரசு துணை நிற்கிறது. விளைநிலத்தில் நெற்பயிர்களை அழித்து வாய்க்கால் வெட்டும் என்எல்சியின் போக்கு கண்டிக்கத்தக்கது
காவல்துறை துணையுடன் மக்களை முடக்கி அவர்களை மிரட்டல், அச்சுறுத்தலுக்கு ஆளாக்குகிறது என்எல்சி. நிலம் அளித்தவர்களுக்கு நிரந்தர வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை என்எல்சி நிறைவேற்றவில்லை. முழு இழப்பீடு வழங்காத நிலையில், விவசாய நிலங்களை கையகப்படுத்தும் என்எல்சி நிறுவனத்தின் முயற்சிக்கு துணை நிற்கும் திமுக அரசின் செயல் கண்டிக்கத் தக்கதாகும்.
விவசாயிகளின் கோரிக்கையான மறு சீரமைப்பு, மற்றும் மறு குடி அமர்வு, சட்டப்படி போதிய சம அளவு இழப்பீடு, வீட்டிற்கு ஒருவர் நிரந்தர வேலை வாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத் தொகை ஆகியவற்றிற்கு நிரந்தரமான முடிவை எடுத்துவிட்டு நில எடுப்பில் இறங்க வேண்டும்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்து இருக்கிறார்.
000