திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே மிளகாய் பொடி தூவி சுஷாந்த் என்ற நகை வியாபாரியிடம் ஒன்றரை கோடி ரூபாய் ரொக்கத்தை வழிப்பறி செய்த குற்றவாளிகளை கேரள மாநிலம் மூணாறில் வைத்து தமிழக போலீசார் கைது செய்து உள்ளனர்.
நெல்லை டவுனில் நகைக் கடை நடத்தி வரும் சுஷாந்த் தமது உதவியாளருடன் கடந்த 30 ம் தேதி அதிகாலை காரில் திருவனந்தபுரத்திற்கு நகை வாங்குவதற்காக புறப்பட்டார். அப்போது நாங்கு நேரி அருகே இரண்டு கார்களில் வந்த மர்ம நபர்கள் ஏழு பேர் அவருடைய காரை வழிமறித்தனர். பின்னர் கார் கண்ணாடியை உடைத்து சுஷாந்த் மற்றும் அவருடைய உதவியாளர் மீது மிளகாய்ப் பொடி தூவினர்கள். உடனே செய்வது அறியாது தவித்த நகை வியாபாரியிடம் இருந்து பணப்பையை பறித்துக் கொண்டு கொள்ளையர்கள் மின்னல் வேகத்தில் சென்று விட்டனர்.
பட்டப் பகலில் மிகவும் துணிகரமாக நடந்த இந்த வழிப்பறி குறித்து துப்புத்துலக்க அமைக்கப்பட்ட டிஎஸ்பி தலைமையில் நான்கு தனி படைகள் தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு கேரளாவில் பதுங்கி இருந்த கொள்ளையர்களை கைது செய்து உள்ளனர்.