ஏப்ரல்.17
பக்ரைனில் வேலைக்காகச் சென்ற புதுக்கோட்டை இளைஞர் சாலை விபத்தில் சிக்கி தவித்துவந்த நிலையில், அவர் பத்திரமாக மீட்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அவரை நேரில் சென்று நலம் விசாரித்த வெளிநாடு வாழ் தமிழர்நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் குடும்பத்தினருக்கு நிதியுதவி அளித்தார்.
புதுக்கோட்டையை சேர்ந்த வீரபாண்டி (வயது 25) பக்ரைன் நாட்டில் வேலை செய்தபோது வாகன விபத்தில் சிக்கி, கடந்த நான்கு மாதமாக அங்கேயே சிகிச்சை பெற்றுவந்தார். அவரை மீட்டுத்தரக் கோரி இளைஞர் வீரபாண்டியின் பெற்றோர், வெளிநாடு வாழ் தமிழர்நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானை சந்தித்து முறையிட்டனர். இதையடுத்து, தமிழக அரசின் நடவடிக்கையால் இளைஞர் வீரபாண்டி அங்கிருந்து விமானம் மூலம் அழைத்துவரப்பட்டு, சிகிச்சைக்காக சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சிகிச்சை பெற்றுவரும் இளைஞர் வீரபாண்டியை, வெளிநாடு தமிழர் நலன் அமைச்சர் செஞ்சி மஸ்தான், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு நேரில் சென்று அரசு சார்பில் நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் மஸ்தான், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த வீரபாண்டி என்பவர் தன்னுடைய வாழ்வாதாரத்திற்காக பக்ரைன் சென்ற இடத்தில் அவருக்கு ஏற்பட்ட விபத்தின் காரணமாக இன்றைக்கு உயிருக்கு போராடக்கூடிய நிலையில் பெற்றோர் நேரடியாக என்னிடம் வந்து நிலையை கூறினர். அது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, அந்த சகோதரனை அங்கிருந்து மீட்டு, தமிழக அரசு சார்பாக சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளோம்.
மருத்துவ குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். அதற்கு உறுதுணையாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தேவையான வசதிகளை செய்து வருகிறார். விமான நிலையத்திலிருந்து அவரை பார்த்தற்கும் தற்போது மருத்துவமனையில் பார்ப்பதற்கும் அவர் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளார். முத்தமிழ் அறிஞர் கலைஞர் 2017ஆம் ஆண்டு, வெளிநாட்டில் வாழ்பவர்களுக்கு ஒரு பாதுகாப்பான நிலை வேண்டும் என்று ஒரு ஆணையும் அமைத்தார்.
அங்கே, வேலைக்காக சென்றவர்கள் உயிரிழக்க நேரிடும் நிலையில், அவர்கள் உடல்கள் இங்கு எடுத்துவரப்பட்டு அவர்கள் பெற்றோர் இடத்தில் சேர்க்கப்பட்டு வருகிறது. இதற்கு தனித்துறை இருக்கும் காரணத்தினால் சூடான், இந்தோனேசியா, உக்ரைன், துபாய் போன்ற நாடுகளில் வேலைக்குச்சென்று சிக்கித் தவிப்பவர்களின் நிலையை அறிந்தால், அவர்களை மீட்டு வர அயலர்கள் தமிழர்கள் நல வாரியம் என்று தனி வாரியமே அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறினார்.
இதைத் தொடர்ந்து, இளைஞர் வீரபாண்டியின் குடும்பத்தாருக்கு, அமைச்சர், தமது சொந்த பணத்தில் இருந்து 50,000 ரூபாய் நிதியுதவி அளித்தார்.