பச்சை பட்டுடன் வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்..! பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்..!!

மே.5

மதுரையில் சித்திரைத் திருவிழாவையொட்டி, கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. பச்சை பட்டுடுத்தி அழகர் ஆற்றில் இறங்கிய நிகழ்ச்சியைக் காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழா கடந்த 23-ந்தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரரும் நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் 2-ந்தேதி நடைபெற்றது. இதையடுத்து, 3-ந்தேதி மீனாட்சி-சுந்தரேசுவரர் திருத்தேரோட்டம் நடைபெற்றது.

இதேபோல், மதுரை அழகர்கோவிலில் சித்திரைத்திருவிழா கடந்த 1-ந்தேதி தொடங்கியது. இதில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக நேற்று முன்தினம் மாலை 5.50 மணிக்கு கள்ளழகர் தங்கப்பல்லக்கில் மதுரைக்கு புறப்பட்டார். மாலை 6 மணி அளவில் அங்குள்ள கொண்டப்ப நாயக்கர் மண்டபத்தில் எழுந்தருளினார். அதைத் தொடர்ந்து 6.50 மணி அளவில் கண்டாங்கி பட்டு உடுத்தி, நெற்றி பட்டை, கரங்களில் வளைதடி, நேரிக்கம்பு, பரிவாரத்துடன் மேள, தாளம் முழங்க கள்ளழகர் தங்கப்பல்லக்கில் மதுரைக்கு புறப்பட்டார்.

நேற்று மூன்று மாவடியில், மதுரை மக்கள், அழகரை எதிர்கொண்டு வரவேற்கும் எதிர் சேவை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து இன்று அதிகாலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை சூடி தல்லாகுளம் கருப்பணசாமி கோவிலுக்கு வந்து, தங்கக்குதிரையில் அமர்ந்து ஆயிரம் பொன் சப்பரத்தில் கள்ளழகர் எழுந்தருளினார். காலை 5.45 மணி முதல் 6.12 மணிக்குள் தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் வீற்றிருந்து வைகை ஆற்றில் இறங்கினார்.

ஆழ்வார்புரம், வடகரை பகுதியில் தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி கள்ளழகர் பவனி வந்தார். கோவிந்தா…கோவிந்தா… கோஷத்துடன் லட்சக்கணக்கான பக்தர்கள் கள்ளழகரை தரிசனம் செய்தனர். பச்சை பட்டுடுத்தில் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி வைகையாற்றில் இறங்கினார் கள்ளழகர். காலை 7.25 மணி வரை கள்ளழகர் வைகை ஆற்றில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியைக் கண்டு தரிசிக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல லட்சம் பக்தர்கள் குவிந்ததால் மதுரை மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *