செப்டம்பர்,11-
அமெரிக்க அதிபர் பயன்படுத்தும் கார்கள் வித விதமானb பெயர்களில் அழைக்கப்படுகின்றன. ‘கேடிலாக் ஒன்’ ‘ஃபர்ஸ்ட் கார்’, ‘பீஸ்ட்’ போன்ற பெயர்கள் பிரசித்தம். உள்நாட்டில் மட்டுமல்ல, வெளிநாடுகளுக்கு சென்றாலும் இந்த வாகனத்தைத்தான் அதிபர்கள் பயன்படுத்துவார்கள்.
அமெரிக்க அதிபர் உலகில் எந்த நாட்டுக்கு சென்றாலும், ’யானை வரும் பின்னே. மணி ஓசை வரும் முன்னே’ என்பது மாதிரி, ஒரே பதிவு எண்ணைக்கொண்ட இரு பீஸ்ட் கார்கள் விமானம் மூலம் அவர் பயணிக்கும் நாட்டுக்கு கொண்டு செல்லப்படும்.
ஜி- 20 உச்சி மாநாட்டில் பங்கேற்க டெல்லி வந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பீஸ்ட் காரில் பயணம் செய்தார். டெல்லி சாலைகளில் நகர்வலம் வந்த, இந்த பீஸ்ட்கார், சமான்ய மக்களை மட்டுமல்லாமல், மேட்டுக்குடி மக்களையும் வாய் பிளக்க வைத்தது.
அப்படி என்ன இந்த காரின் ஸ்பெஷல்?. * ஜோ பைடன் இப்போது பயன்படுத்தும் ‘பீஸ்ட் காரை’ ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் விற்பனைக்கு கொண்டு வந்தது.* இதன் எடை சுமார் 9 ஆயிரம் கிலோ . நீளம் 18 அடி .இதில் 7 பேர் பயணம் செய்யலாம். ஆனால் பெரும்பாலும் அதிபர்உள்ளிட்ட 4 பேர் மட்டுமே பயணிக்கிறார்கள்.
*இந்த காரில் அவசர காலத்தில் பயன்படுத்த அதிபரின் குரூப் ரத்தம் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். * ரசாயன தாக்குதல் நடத்தினாலும், காருக்குள் இருக்கும். அதிபருக்கு பாதிப்பு ஏற்படாது. டயர் பஞ்சர் ஆனாலும் கார் எந்த வித தடையும் இல்லாமல் ஓடும். இருள் சூழ்ந்த பகுதியை பார்க்கும் கருவிகள், தாக்குதலில் இருந்து தப்பிக்க புகை மண்டலத்தை ஏற்படுத்தும் சாதனம், எதிரிகளின் வாகனம் பின்தொடர்வதை தடுக்க எண்ணெய் பீய்ச்சி அடிக்கும் சாதனம் ஆகியவை இதில் உள்ளன.
* மற்றவர்கள் கார் கதவை திறப்பதை தடுக்கும் வகையில் அதன் கைப்பிடியில் 120 வோல்ட் மின்சாரத்தை பாய்ச்சி ’ஷாக்’ கொடுக்கும் வசதியும் இதில் உள்ளது. *காருக்குள் ஜன்னல்களால் தனி அறையை ஒரு ஸ்விட்ச் மூலமாக உருவாக்கி கொள்ள முடியும். இந்த ஸ்விட்ச் கண்ட்ரோலை அதிபர் மட்டுமே வைத்திருப்பார்.
*அதிபரின் கார் அணிவகுப்பில் (கான்வாய்) ஒரே பதிவெண் கொண்ட இரண்டு பீஸ்ட் கார்கள் செல்லும்.எந்த காரில் அதிபர் செல்கிறார் என்பதை, அவரது பாதுகாவலர்கள் மட்டுமே அறிவார்கள். *இந்த காரின் விலை 12 கோடி ரூபாய் உலகிலேயே தற்சமயம் மிகவும் பாதுகாப்பான வாகனமாக ஜோ பைடனின் தி பீஸ்ட் விளங்குகிறது.
000
அமெரிக்க அதிபரா? கொக்கா?