June 15, 23
நூற்றுக்கணக்கான பெண்களை ஏமாற்றி அவர்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய நாகர்கோயில் காசிக்கு ஆயுள் தண்டனை கிடைத்துள்ளது. பெண்களிடம் ஆசை வார்த்தைகளைக் கூறி சமூக வலைத்தளங்களில் ஏமாற்றி வந்தவர், நாகர்கோயில் காசி. இவர், தமிழகம் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த 120 க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் இளம் பெண்களைக் காதலிப்பதாக கூறி ஏமாற்றியுள்ளார். ஏமாந்த பெண்களிடம் பணமோசடி மற்றும் ஆபாச புகைப்படங்களை வெளியிட்டுவதாக மிரட்டி மீண்டும் பணம் பெறுவது என குற்றச்செயல்களில் இந்த ஆள் ஈடுபட்டு வந்தார்.காசியினால் பாதிக்கப்பட்ட பெண்கள் அவர் மீது தொடர்ந்து புகார் அளித்து வந்தனர். இதில், முக்கியமாக நாகர்கோவிலைச் சேர்ந்த ஒரு பெண் கொடுத்த புகாரின் பேரில் காசி கடந்த 2020 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் மாணவிகள் உட்பட ஏராளமான இளம் பெண்களை காசி காதலிப்பதாகக் கூறி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காசி மீது போக்சோ வழக்கு, பாலியல் வன்கொடுமை வழக்கு உள்ளிட்ட பல வழக்குகள் பாய்ந்தன.
இந்த வழக்குகளை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வந்தனர். இந்நிலையில் அவரது செல்போன் மற்றும் லேப்டாப் ஆகியவற்றில் இருந்த ஆபாச படங்கள் அழிக்கப்பட்டுள்ளது குறித்து சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். மிக முக்கிய ஆதாரங்களைக் கொண்ட அந்த படங்களை யார் அழித்திருக்கக்கூடும் என்று விசாரிக்கையில், காசியின் தந்தை தங்கபாண்டியன் சிக்கினார். அவர் தனது மகனின் மொபைலில் இருந்த ஆதரங்களை அழித்ததற்காக போலீஸில் மாட்டினார். பின்னர் அவரும் சிறையில் அடைக்கப்பட்டார்.