ஜூன்.1
தமிழக அரசை கலந்தாலோசனை செய்யாமல் ஆளுநர் ஆர்.என். ரவி தன்னிச்சையாக செயல்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை அண்ணாபல்கலைக்கழகத்தில் மாநில கல்விக் கொள்கை குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆலோசனை மேற்கொண்டார். இதில், 19 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, மாணவர் சேர்க்கை, பாடத்திட்டம் குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்வுகளை நடத்தவும் முடிவு செய்யப்பட்டிருப்பதாக கூறினார். மேலும், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சரிடம் முறையிட்டிருப்பதாக கூறிய அமைச்சர் பொன்முடி, ஆளுநர் உடனான ஆலோசனை கூட்டத்தில் துணைவேந்தர்கள் பங்கேற்பது அவர்களின் சொந்த விருப்பம் என்றும் தெரிவித்தார்.