சென்னை, ஜூன்19. கடந்த ஏப்ரல் முதல் அனலால் வறுபட்டுக் கொண்டிருந்த சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் பெய்த மழை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஞாயிற்றுக் கிழமை காலை ஆங்காங்கு லேசான மழை பெய்ததால் வெப்பம் குறைந்து இதமான சூழல் நிலவியது. மேகமூட்டத்துடன் காணப்பட்ட வானம் இரவில் நல்ல மழையை கொட்டியது. சென்னை மற்றும் புறநகரில் ஞாயிறு இரவு 10 மணிக்கு ஆரம்பமான மழை இரவு முழுவதும் விட்டு விட்டுப் பெய்து கொண்டிருந்து. அதிகாலை 4 மணி அளவில் கொஞ்சம் கனமாகவே கொட்டியது. பிறகு சற்று ஓய்ந்த மழை காலை எட்டு மணி வரை தூறலாக நீடித்துக் கொண்டிருந்தது.
இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கற்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அதே வேளையில் பிளஸ் -2 துணைத் தேர்வு ஏற்கனவே அறிவித்து இருந்தடி நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்து இருக்கிறது.
அக்டோபர்,நவம்பர் மாதங்களில் வடகிழக்குப் பருவமழை அதிகம் பெய்யும் போதுதான் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பது உண்டு. ஆனால் கோடை மழை அதிகம் பெய்ததால் இந்த ஜூன் மாத த்திலேயே பள்ளிகளுக்கு விடுமுறை விட நேரிட்டு உள்ளது.
துபாய், அபுதாபி, லண்டன், சார்ஜா, சிங்கப்பூர் உட்பட 10 இடங்களில் இருந்து வந்த விமானங்கள் கனமழை காரணமாக சென்னையில் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமிட்டு பறந்தன. பின்னர் அவற்றை பெங்களூருக்கு திருப்பி விட நேரிட்டது.
விடிய விடிய மழை பெய்தாலும் போக்குவரத்து பாதிக்கப்படும் அளவுக்கு சென்னை சாலைகளில் தண்ணீர் தேங்கவில்லை என்று மாநகராட்சி அதிகாரிகள் கூறி உள்ளனர். ஓரிரு இடங்களில் விழுந்த மரங்களை அப்புறப்படுத்தும் வேலை நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர்.
இதனிடையே தமிழ்நாட்டின் வடக்கு மாவட்டங்களில் மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
000