ஜாதி வன்மம் எப்போதுமே கொதிநிலையில் இருக்கும் மாவட்டங்களில், நெல்லைக்கு‘முதலிடம் ‘உண்டு.
ஆட்சிகள் மாறினாலும் இங்குள்ள அரிவாள் கலாச்சாரம் மட்டும் மாறுவதே இல்லை.
மீண்டும் ஒரு ஜாதி யுத்தத்துக்கு கால்கோள் போட்டுள்ளது, நாங்குநேரி.
நெல்லையில் பதற்றம், பீதி, அச்சத்தை விதைத்துள்ள பூகம்பத்தின் மையப்புள்ளி.அரசாங்க மேல்நிலைப்பள்ளி என்பது அதிரவைப்பதாக உள்ளது.
என்ன நடந்தது அங்கே?
நாங்குநேரியைச் சேர்ந்த கூலி தொழிலாளி முனியாண்டி– அம்பிகாபதி தம்பதியின் மகன் சின்னத்துரை, 17 வயதான இவர்,வள்ளியூரில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலை பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறார். அதே பள்ளியில் பயிலும் நாங்குநேரியைச் சேர்ந்த சகமாணவர்கள் சின்னத்துரையை ராக்கிங் செய்துள்ளனர்.
இதனால் அவர் ஒரு வாரமாக பள்ளிக்குச் செல்லவில்லை. ஆசிரியர்கள்,காரணம் கேட்டபோது நடந்த சம்பவங்களை சொல்லி கதறியுள்ளார், சின்னதுரை. ஆசிரியர்கள், அந்த மாணவர்களை கண்டித்தனர்.
இதனால் ஆத்திரமுற்ற பிளஸ் 2 மாணவர்கள் சிலர் கடந்த 9 ஆம் தேதி நள்ளிரவில்நாங்குநேரியில் உள்ள சின்னத்துரையின் வீட்டுக்குள் புமகுந்து அவரை அரிவாளால் வெட்டினர்.
அண்ணனை அரிவாளால் வெட்டுவதை பார்த்ததும் அவரது தங்கை சந்திராசெல்வி அலறி அடித்து ஓடி வந்தார்.அவர் 9 ஆம் வகுப்பு படிக்கிறார் . அவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இருவரும் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர்.உடனடியாகதிருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தலித் சமூகத்தை சேர்ந்த சின்னத்துரையின் தாயார் அம்பிகாபதி, இந்த சம்பவத்தின் பின்னணியை கண்ணீர் சிந்தியபடி தெரிவித்தார்,
‘’என் மகன் படிக்கும் பள்ளியில் ஜாதிய ரீதியிலான அதிகார போக்கு அதிகமாகவேஉள்ளது. உயர்ஜாதி மாணவர்கள், இட்லி போன்ற தீவனங்களை வாங்கி தருமாறு என் மகனை கட்டாயப்படுத்தி உள்ளனர்.சிகரெட்டும் வாங்கி கொடுக்க வேண்டும்.
அவனது பையில் வைத்துள்ள பணத்தையும் பறித்துக்கொள்வதுண்டு.ஜாதி ரீதியாக திட்டுவதும் வழக்கம். வகுப்பு எடுக்கும் ஆசிரியரை பார்த்து விசில் அடிக்குமாறும் என் மகன் சின்னத்துரையை நிர்ப்பந்தம் செய்வதுண்டு.இதனால் அவனுக்கு மனநிலையே சரி இல்லாமல் போய் விட்டது.
ஒரு கட்டத்தில் படிப்பை நிறுத்தி விட்டு, சென்னைக்கு சென்று ஏதாவது வேலை பார்த்து பிழைக்கலாம் என்ற முடிவுக்கு வந்து விட்டான். சின்னத்துரை பள்ளிக்கு போகாததால், ஆசிரியர்கள் எங்களை அழைத்து விவரம் கேட்டனர்.
நாங்கள், என் மகனுக்கு நேர்ந்த கொடுமைகளை சொன்னோம். சித்ரவதை செய்த மாணவர்களை, ஆசிரியர்கள் கண்டித்துள்ளனர்.இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அந்த மாணவர்கள் வீடு புகுந்து என் மகனையும், மகளையும் அரிவாளால் கொடூரமாக வெட்டி சிதைத்தனர்’’என குமுறினார், அம்பிகாபதி.
இந்த விவகாரத்தை ஆரம்பத்தில் கண்டு கொள்ளாத போலீசார், முதலமைச்சர் வரை விவகாரம் சென்றதும் சுறுசுறுப்பானார்கள்.கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்ட பிளஸ் 2 மாணவர்கள் நால்வரையும், மேலும் மூன்று சிறுவர்களையும் கைது செய்து, நெல்லை கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.
கைதான மாணவர்களின் நெருங்கிய உறவினர்கள் பிரபல அரசியல் பிரமுகர்கள் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டிஇருப்பதால் மக்களின் அச்சம் மேலும் அதிகரித்துள்ளது.
இது போன்ற நிகழ்வுகளை தவிர்ப்பது குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்க, நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு நபர் குழுவை அமைத்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
’’இளைய சமுதாயத்தினரிடையே சாதி, இன உணர்வு பரவும் பிரச்சினையில் அரசு எந்த வகையான நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது குறித்தும்,பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, இனப் பிரிவினைகள் இல்லாத ஒரு சூழ்நிலையை உருவாக்கிட மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அரசுக்கு ஆலோசனைகளை வழங்கிட ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைத்திட உத்தரவிட்டுள்ளேன்’ எனஸ்டாலின் தெரிவித்துள்ளார்
நாங்குநேரி பற்றி எரிந்து கொண்டிருக்கும் நிலையில் அனைத்து அரசியல்வாதிகள் கவனமும் இப்போது நெல்லை பக்கம் திரும் பியுள்ளது.
நெல்லையில் சிகிச்சை பெறும் அண்ணன்–தங்கையை சட்டப்பேரவை தலைவர் அப்பாவு,அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் சொன்னார்கள்.
ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நெல்லைக்கு விசிட் அடித்த தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்,’’ புத்தகம்தூக்க வேண்டிய வயதில் ,மாணவர்கள், அரிவாளை தூக்குகிறார்களே’என வேதனையை பகிர்ந்துள்ளார்..
ஜாதிப்பொறி மற்ற பகுதிகளுக்கும் பரவாமல் தடுக்க, அரசாங்கம் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே நெல்லை மக்களின் ஆசை.