ஆகஸ்டு,10-
இந்திய கிராங்களில் ஆரம்பக்கல்வி மேம்பாடு அடைந்துள்ளதா? கிராமப்புற குழந்தைகள் ஒழுங்காக படிக்கிறார்களா? என அண்மையில் ஒரு சர்வே நடத்தப்படது. நாடு முழுவதும் 21 மாநிலங்களை சேர்ந்த 6 ஆயிரத்து 229 பெற்றோரிடம் இந்த சர்வே நடந்தது.
சர்வே முடிவுகளை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டு இருக்கிறார். முடிவுகள் மூச்சு திணற வைக்கும் ரகம்.
6 முதல் 16 வயது வரையிலான பள்ளி மாணவ- மாணவிகளின் பெற்றோர், அழாத குறையாக சர்வேசெய்ய வந்தவர்களிடம் புலம்பி தீர்த்துள்ளனர்.
’எங்கள் குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டும் என்பதற்காக ஸ்மார்ட் போன் வாங்கி கொடுத்தோம். ஆனால் அவர்கள் படிப்பதற்கு போனை பயன்படுத்துவது இல்லை. எந்த நேரமும் பொழுது போக்கு நிகழ்ச்சிகளையே பார்த்து கொண்டிருக்கிறார்கள்’’ என குமுறியுள்ளனர்.
புத்தகங்களை பரணில் போட்டு விட்டு, இந்த ’நாளைய இந்தியா’க்கள் ஸ்மார்ட் போன்களில் அப்படி என்ன பார்க்கிறார்கள்?
கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால், தங்கள்பிள்ளைகள் வீட்டில் இருந்தே படித்து அறிவை வளர்த்து கொள்ளட்டும் என்ற நப்பாசையில் , கிராமத்து பெற்றோர்கள், ஸ்மார்ட் போன்கள் வாங்கி கொடுத்துள்ளனர்.
இன்றைய தினம் கிராமங்களில் 50 சதவீத பள்ளிக்குழந்தைகள் கையில் ஸ்மார்ட் போன் உள்ளது. அவர்களில் பெரும்பாலான பிள்ளைகள், வீடியோ கேம் பார்த்து , தாங்கள் சாகசம் செய்வதாக நினைத்து, நாள் முழுவதையும் விளையாட்டிலேயே கழிக்கின்றனர்.
கொஞ்சம் விவரம் தெரிந்த பள்ளிக்குழந்தைகள் புதிய சினிமாக்களை ’டவுன்லோடு’ செய்து, நண்பர்களோடு படம் பார்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இன்னும் சிலர் இசைப் பைத்தியங்களாக உள்ளனர். அவர்கள் சதா 24 மணி நேரமும் பாடல்கள் கேட்டு பரவசப்படுகின்றனர்.
ஸ்மார்ட் போனை 34 சதவீத பள்ளிக்குழந்தைகள் மட்டுமே கல்விக்காக செலவிடுவதாக அந்த சர்வே அதிர்ச்சி தகவலைதெரிவிக்கிறது.
குழந்தைகளை மட்டுமே குறை சொல்லாமல், பெற்றோரின் அலட்சியத்தையும் இந்த சர்வே சுட்டுக்காட்டுகிறது.‘ஒழுங்கா ஸ்கூலுக்கு போனியா? டீச்சர் என்ன சொல்லி தந்தாங்க? என குழந்தைகளிடம்,. தினமும் 40 சதவீத பெற்றோர் மட்டுமே அக்கறையுடன் விசாரிப்பவர்களாக உள்ளனர்.
32 சதவீத பெற்றோர் வாரம் ஒரு முறை ,’ஸ்கூல் எப்படி போய்ட்டு இருக்கு ?’ என போகிற போக்கில் பிள்ளைகளிடம் விசாரிக்கும் ரகமாக உள்ளனர். எஞ்சிய பெற்றோர் , தங்கள் குழந்தைகளை, ஒரு நாளும், ஒரு கேள்வியும் கேட்பதில்லை’ என கவலையுடன் சொல்கிறது,சர்வே !
000